
பெந்தோங், அக்டோபர் 7 – கெந்திங் ஹைலண்ட்ஸிலுள்ள SkyAvenue நகைக்கடையில் 1.7 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆகஸ்ட் 17ஆம் தேதி நடந்த இந்தக் கொள்ளை தொடர்பாக, நேற்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்த சீனாவை சேர்ந்த ஒருவரைப் போலீசார் கைது செய்தனர். அவரை அக்டோபர் 10ஆம் தேதி வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதுவரை 5 வெளிநாட்டவர்கள் மற்றும் 2 உள்ளூர்வாசிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பஹாங் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ அஸ்ரி அக்மர் அயோப் (Datuk Azry Akmar Ayob) தெரிவித்தார். எனினும், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் எதுவும் இதுவரை மீட்கப்படவில்லை.
முகமூடி அணிந்த 3 பேர் கோடாரி மற்றும் இரும்புக் கம்பிகளுடன் நகைக்கடைக்குள் புகுந்து, சுமார் 1.7 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துத் தப்பிச் சென்றனர். அச்சந்தேக நபர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.



