
கோலாலம்பூர், அக்.07-2027ஆம் கல்வியாண்டின் முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரை 491,649 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக கல்வித் துணை அமைச்சர் Wong Kah Woh தெரிவித்துள்ளார்.
இதில் 73,498 விண்ணப்பங்கள் ஆறு வயது மாணவர்களுடையவை. 418,151 விண்ணப்பங்கள் ஏழு வயது மாணவர்கள் என அவர் கூறினார். ஆறு வயதில் முதலாம் ஆண்டில் தங்களது பிள்ளைகளைச் சேர்ப்பது பெற்றோரின் விருப்பத்திற்கு உட்பட்டது என ஏற்கனவே கூறப்பட்டிருந்தது.
மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பை எதிர்கொள்ள, கூடுதல் வகுப்பறைகள் அமைத்தல், பள்ளி வளாகங்களைச் சிறப்பாகப் பயன்படுத்துதல் மற்றும் இரு வேளைப் பள்ளி முறையைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை கல்வி அமைச்சு மேற்கொண்டு வருகிறது.
தொழில்துறை கட்டுமான முறை (IBS) மூலம் 838 பள்ளிகளில் 2,596 புதிய வகுப்பறைகள் அமைக்கப்படவுள்ளன. மேலும், 605 பள்ளிகளில் 677 கூடுதல் வகுப்பறைகளும், 1,514 பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களும் மேற்கொள்ளப்படவுள்ளன.
ஆசிரியர் தேவையைப் பூர்த்தி செய்ய, சேவை ஒப்பந்தத் திட்டத்தின் கீழ் 3,150 ஆசிரியர்கள் வரும் டிசம்பர் 7ஆம் தேதி பணியில் அமர்த்தப்படவுள்ளனர். அவர்களின் பணியிடங்கள் பள்ளிகளின் தேவைக்கு ஏற்ப ஒதுக்கப்படும்.
இதனிடையே, மாணவர் சேர்க்கை, ஆசிரியர் தேவை, வகுப்பறை கொள்ளளவு மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றை அமைச்சு தொடர்ந்து கண்காணிக்கும் என Kah Woh கூறினார். அனைத்து மாணவர்களுக்கும் கல்வி வாய்ப்பும் தரமான கற்றல் சூழலும் உறுதி செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.



