
பத்து பஹாட், அக்.07-ஜோகூர், பத்து பஹாட் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று மூடப்பட்டன. நேற்றிரவு முதல் காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீடு (API) ‘மிகவும் ஆரோக்கியமற்ற’ நிலையில் பதிவானதைத் தொடர்ந்து அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும் மாணவர்கள் வீட்டிலிருந்தே கற்றலைத் தொடர்ந்தனர்.
பள்ளிகள் முன்னதாகவே PdPR எனும் வீட்டிலிருந்து கற்பித்தல் மற்றும் கற்றல் முறைக்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில், பல மாணவர்கள் ஆண்டு இறுதித் தேர்வுகளுக்குத் தயாராகும் வகையில் பாடங்களை மீள்பார்வை செய்தனர்.
இவ்வேளையில் ஜோகூர் மாநிலக் கல்வித் துறை மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகம் ஆகியவற்றின் அறிவுறுத்தலின்படி மாணவர்கள் PdPR மூலம் கற்றலைத் தொடர்வதாக SK Rengit பள்ளியின் மூத்த உதவி முதல்வர் Zubaidah Dapat தெரிவித்தார். வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகள் மூலம் மாணவர்களுக்கான இணையவழி கற்றல் நடவடிக்கைகள் வீட்டிலிருந்தே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புகைமூட்டம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டாலும், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதே அதன் நோக்கம் என அவர் கூறினார்.
இதனிடையே, மாணவர்களுக்கு புகைமூட்டத்தால் ஏற்படக்கூடிய உடல்நலப் பாதிப்புகள் குறித்து பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பிள்ளைகளிடம் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பள்ளிகளை மூடியது சரியான நடவடிக்கை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.



