
பெந்தோங், ஆகஸ்ட்-18-பஹாங், கெந்திங் மலையில் பிரபல பேரங்காடியில் ஒன்றில் அமைந்துள்ள தங்க நகைக்கடையில், வெறும் இரண்டே நிமிடங்களில் சுமார் 1.7 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மூவரைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
Sky Avenue வளாகத்தில் நேற்று காலை 11.40 மணியளவில் இந்தத் துணிகரக் கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்தது.
முகமூடி மற்றும் தொப்பி அணிந்து கடைக்குள் நுழைந்த மூன்று நபர்கள், கோடரி மற்றும் கம்பிகளைக் கொண்டு கண்ணாடிகளை உடைத்து நகைகளை அள்ளிச் சென்றதாக பஹாங் மாநில இடைக்கால போலீஸ் தலைவர் Azry Akmar Ayob தெரிவித்தார்.
கொள்ளையடித்த உடனே அவர்கள் வாகனத்தில் ஏறி மலையடிவாரத்தை நோக்கித் தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவத்தை அடுத்து அவர்களைப் பிடிக்க போலீஸார் Op Tutup தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், அதற்கு முன்னரே அவர்களது வாகனம் சோதனைச் சாவடியைக் கடந்துவிட்டது CCTV பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
புக்கிட் அமான் மற்றும் பஹாங் குற்றப் புலனாய்வுத் துறையினர் இணைந்து கொள்ளையர்களைக் கைதுச் செய்ய தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.



