கோலாலம்பூர், அக் 18 – கோலாலம்பூர், கெப்போங்கில் கடை வீடுகளில் விபச்சார நடவடிக்கை நடைபெறும் இடங்களில் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் குழு வியாழன் கிழமை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 25 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பலர் வெளிநாடுகளைச் சேர்ந்த விலைமாதர்கள் என கூறப்பட்டது. கடை வீடுகளில் விபச்சாரம் நடைபெறுவதாக சந்தேகிக்கப்படும் இடங்களில் கோலாலம்பூர் குடிநுழைவுத்துறையைச் சேர்ந்த 15 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
இந்தேனேசியாவைச் சேர்ந்த எண்மர், தாய்லாந்தைச் சேர்ந்த எழுவர், வியட்னாமைச் சேர்ந்த ஐவரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர். இவர்கள் அனைவரும் பெண்களாவர். இதுதவிர கடை வீடு ஒன்றின் நிர்வாகியும் , விபச்சார நடவடிக்கைக்கு தரகராக செயல்பட்டவர் என நம்பப்படும் இரண்டு மலேசியர்களும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டுப் பெண்கள் ,1963 ஆம் ஆண்டின் குடிநுழைவு சட்ட விதிகளை மீறியது, வருகை பாஸ்களை தவறாக பயன்படுத்தியது உட்பட குடிநுழைவு சட்டங்களை மீறியதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குடிநுழைவுத்துறை வெளியட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த கடை வீடுகளில் நடைபெறும் விபச்சார நடவடிக்கைகளுக்கான வாட்சாப் உட்பட பல்வேறு சமூக வலைத்தளங்கள் மூலமாக வாடிக்கையாளர்கள் தேடப்பட்டுவந்ததாகவும் கூறப்படுகிறது, காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த மையங்கள் விடியற்காலை 6 மணிவரை 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதோடு கடை வீடுகளில் ஒழுங்கீன நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் பெற்றதைத் தொடர்ந்து குடிநுழைவுத்துறை சோதனையை நடத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட அனைவருரிடமும் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குப்படும் என்றும் குடிநுழைவுத்துறை அறிவித்துள்ளது.