
கோலாத் திரெங்கானு, ஏப் 14 – கோலாத் திரெங்கானு , kampung Banggol Katong கில் தனது வளர்ப்பு குடும்பத்தின் பராமரிப்பில் இருந்த மூன்று வயது சிறுவன், துன்புறுத்தப்பட்டதன் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
நேற்று பலத்த காயங்களுடன் சுயநினைவின்றி இருந்த அச்சிறுவன் புக்கிட் பாயோங் சுகாதார மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டான் .
இச்சம்பவம் குறித்து மாலை மணி 3.46க்கு மருத்துவமனை அதிகாரிகள் தங்களுக்கு தெரிவித்ததாக கோலாத் திரெங்கானு போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் அஸ்லி முகமட் கூறினார்.
மருத்துவமனைக்கு வந்தபோது உயிருடன் இருந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லாததைக் கண்ட மருத்துவ ஊழியர்கள், அச்சிறுவன் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.
கை, கால்களில் கடுமையான இரத்த ஓட்டக் குறைவால் ஏற்பட்ட சிக்கல்களே அச்சிறுவனின் மரணத்திற்கு முக்கிய காரணம் என பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.
உடைந்த தொடை எலும்பு, தசைகள் முக்கிய இரத்த நாளங்களை அழுத்தியதால், அச்சிறுவன் உயிருக்கு ஆபத்தான சிக்கல்களுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.
உடல் பரிசோதனையில் அச்சிறுவனின் மார்பு மற்றும் தொடைகளில் சிராய்ப்புகள் மற்றும் வெட்டுக்காயங்கள் இருப்பதும், வலது காலில் திரவம் நிறைந்த கொப்புளங்கள் பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரியவந்தது என அஸ்லி முகமட் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த சிறுவன் மரணம் தொடர்பில் 30 மற்றும் 50 வயதுக்கிடையிலான இரண்டு ஆடவர்கள் மற்றும் ஒரு பெண்மணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அந்த குழந்தையின் வளர்ப்பு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது.



