
கோலாலம்பூர், ஏப்ரல்-24-தற்போது வரை, கோலாலம்பூரில் 163 முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் முறையான அனுமதியின்றி அரசு நிலங்களில் அமைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவ்விடங்களில் புதிய கட்டுமானங்களை எழுப்பவும், ஏற்கனவே உள்ளவற்றை விரிவாக்கம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹானா இயோ அறிவித்துள்ளார்.
விதிகளை மீறுபவர்கள் மீது ஊராட்சி அதிகாரிகளால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
இருப்பினும், இந்த விவகாரத்தை அரசாங்கம் மிகவும் கவனமாகவும், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் கையாளும் என அவர் உறுதியளித்தார்.
பிரச்சனைகளைச் சுமுகமாகத் தீர்க்க, அந்தந்தத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைமையில் 11 துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவை சமய அமைப்புகளுடன் இணைந்து ஆலோசனைகளை மேற்கொள்ளும்.
செவ்வாய்க்கிழமை, கூட்டரசு பிரதேச முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் செயற்குழுக் கூட்டத்திற்குத் தலைமையேற்றப் பிறகு, தனது ஃபேஸ்புக் பதிவில் ஹானா இவ்விவரங்களை வெளியிட்டார்.



