
கோலாலம்பூர், ஆகஸ்ட்-29,கோலாலம்பூர் சாலைப் போக்குவரத்து இலாகா நடத்திய 3-நாள் சிறப்பு அமுலாக்க சோதனையில் Ferrari F8, Porsche Macan மற்றும் Range Rover Sport உட்பட 23 சொகுசு மற்றும் அதிவேகக் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
செவ்வாய் முதல் வியாழக்கிழமை வரை நடைபெற்ற இந்த சோதனையில் BMW, Mercedes-Benz, Audi, Volvo மற்றும் Toyota Alphard போன்ற ஆடம்பர கார்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக கோலாலம்பூர் JPJ இயக்குநர் Hamidi Adam தெரிவித்தார்.
மேலும், செத்தியாவங்சா-பந்தாய் விரைவுச்சாலை (SPE) டோல் சாவடியில் Honda Civic Type R காரை ஓட்டிச் சென்ற ரொஹிங்கியா ஆடவர் ஒருவர் முறையான ஓட்டுநர் உரிமம் இல்லாத காரணத்திற்காக தடுத்து நிறுத்தப்பட்டார்.
இந்த நடவடிக்கையின் போது காலாவதியான சாலை வரி, காப்புறுதி எடுக்காதது, ஓட்டுநர் உரிமம் இல்லாதது மற்றும் போலி பதிவு எண் பயன்பாடு போன்ற பல்வேறு குற்றங்களுக்காக மொத்தம் 73 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.
சொகுசு காரை வைத்திருப்பது சட்டத்திற்கு அப்பாற்பட்டதல்ல என எச்சரித்த Hamidi, கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 179 சொகுசு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.



