
கோலா பிலா, செப்-04-நெகிரி செம்பிலான், கோலா பிலாவில் உள்ள Dataran Melang பகுதியில் மூன்று இளம் பெண்களிடையே ஏற்பட்ட மோதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களில் வைரலான அச்சம்பவம் தொடர்பில் கடந்த புதன்கிழமை புகார் கிடைத்ததாக கோலா பிலா மாவட்ட காவல் துறைத் தலைவர் Superintendan Muhamad Mustafah Hussain தெரிவித்தார்.
சம்பவத்தன்று 15 வயது மாணவி ஒருவர் தமக்கு அறிமுகமான இரு பெண்களைச் சந்திக்க தமது சகோதரருடன் Dataran Melang பகுதிக்குச் சென்றுள்ளார். சமூக வலைதளங்களில் அம்மாணவியின் புகைப்படம் பரப்பப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட தவறான புரிதல் குறித்து பேசுவதே அச்சந்திப்பின் முக்கிய நோக்கம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சந்திப்பின் போது, மாணவிக்கும் மற்ற இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் மோதல் ஏற்பட்டதில் அம்மாணவி காயமுற்றார்.
அதனையடுத்து அம்மாணவி குடும்பத்தினருடன் வீட்டுக்குத் திரும்பியுள்ளார். பின்னர், கடந்த வாரம் வியாழக்கிழமை தமது தந்தையுடன் மோதலில் ஈடுபட்ட இரு பெண்களில் ஒருவரின் வீட்டுக்குச் சென்று சம்பவம் குறித்து பேசிய அம்மாணவி, பின்னர் காவல் துறையில் புகார் அளித்ததாக Muhamad Mustafah Hussin கூறினார். மோதலின் உண்மையான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தி வரும் காவல் துறை, அதில் தொடர்புடைய அனைவரையும் அடையாளம் கண்டு வருகிறது.
சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்த பொதுமக்கள் கோலா பிலா மாவட்ட போலீஸ் தலைமையகத்தை 06-48429999 என்ற எண்ணிலோ, குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை அதிகாரி Sarjan Shamsuldalila Mohamadட்டை 011-10129038 என்ற எண்ணிலோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தையோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.



