
கோலா பிலா, ஜூலை.31-சிலாங்கூரில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பதவியில் நீடிப்பதற்கான தகுதியை இழந்து விட்டதாகக் கூறப்படுவது குறித்து மாநில அரசாங்கம் ஆய்வு செய்து வருகிறது.
அவ்விவகாரம் தொடர்பில் மாநில அரசுக்கு முதல் கட்ட தகவல்கள் கிடைத்துள்ளன. இடைத்தேர்தல் அவசியமா என்பது உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி முடிவெடுக்கும் முன் தாம் சட்ட ஆலோசனை பெற்று வருவதாக மந்திரி பெசார் Datuk Amirudin Shari தெரிவித்தார்.
வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடைபெறவிருக்கும் மாநில சட்டமன்றக் கூட்டத் தொடரின் போது அவ்விஷயம் எழுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
சிலாங்கூர் மாநில சட்ட மன்ற உறுப்பினர் தகுதியிழந்து விட்டதாகக் கூறப்படுவதை கவனமாக ஆராய வேண்டியிருக்கிறது. அதில் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க முடியாது என Amirudin Shari விளக்கினார்.
இடைத்தேர்தல் தேவை என்பது சட்டப்பூர்வமாகக் கண்டறியப்பட்டால், அது குறித்து தேர்தல் ஆணையத்திற்குப் பரிந்துரைக்கப்படும். இவ்வேளையில், சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் யார் என்பது உள்ளிட்ட விவரங்களை வழங்க Amirudin Shari மறுத்து விட்டார்.



