
கோலாலம்பூர், செப்டம்பர்-13 – மலேசியா வரும் செப்டம்பர் 17 முதல் 19 வரை கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் Smart City Expo Kuala Lumpur 2025 (SCEKL 2025), Malaysia Digital Xceleration (MDX 2025), மற்றும் SmartGov Malaysia 2025 ஆகிய மூன்று முதன்மை நிகழ்வுகளை ஒரே நேரத்தில் நடத்துகிறது
AI அதி நவீன தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் ஆளுமையை அதன் பொருளாதார இலட்சியங்களின் மையத்தில் கொண்டு வைக்கும் நோக்கில் இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மலேசியாவின் விவேக நகர சுற்றுச்சூழல் அமைப்பை மேலும் வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, மலேசிய டிஜிட்டல் பொருளாதாரக் கழகமான MDEC மற்றும் டிஜிட்டல் நேஷனல் பெர்ஹாட் (DNB) ஆகியவற்றுடன் இணைந்து இலக்கவியல் அமைச்சு இந்த Smart City Expo 2025 கண்காட்சியை செயல்படுகிறது.
இது, ஆசியான் வட்டாரத்தின் அடுத்த நகர்ப்புற உருமாற்ற அலையை எவ்வாறு புத்திசாலித்தனமான, உள்ளடக்கிய மற்றும் நிலையான நகரங்கள் இயக்க முடியும் என்பதை வெளிப்படுத்தும் என, Digital Nasional Berhad-டின் நிறுவன வியூகப் பிரிவுத் தலைவர் பிரேம் குமார் மேனன் வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.
பல்வேறு துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு இதில் முக்கியமாக இருக்கும் என்றார் அவர்.
ஏற்பாட்டுக் குழு 10,000 பங்கேற்பாளர்களை எதிர்பார்க்கும் நிலையில், வரவேற்பும் பங்கேற்பும் இதுவரை ஊக்கமளிக்கும் வகையில் உள்ளதாக அவர் சொன்னார்.
இவ்வேளையில் இந்த உச்ச நிலை மாநாடு மலேசியர்களின் திறமையையும், விரைவான புதுமை தழுவலையும் கொண்டாடும் என, Synapze Sdn Bhd இயக்குநர் ஆண்ட்ரூ தாய் (Andrew Tai) கூறினார்.
அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை எளிமைப்படுத்துவதே MDX கண்காட்சியின் நோக்கம் என்றும், இதன் மூலம் வரும் ஆண்டுகளில் இந்த கண்டுபிடிப்புகள் எவ்வாறு வடிவம் பெறும் என்பதை பொது மக்கள் நன்கு புரிந்துகொள்ள முடியும் என்றும் அண்ட்ரூ சொன்னார்.
கண்காட்சி பொது மக்களுக்கு திறந்திருக்கும்; அதே நேரத்தில் மாநாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற டிக்கெட்டுகள் தேவையாகும்.
இந்த MDX மாநாடு குறித்த மேல் விவரங்களை http://mdxsummit.com/ என்ற இணைய அகப்பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம்.