
ஷா ஆலாம் – ஆகஸ்ட்-2 – சிலாங்கூரில் செப்டம்பர் 1 முதல் புதியத் தண்ணீர் கட்டண விகிதம் அமுலுக்கு வருகிறது.
எனினும் மாதமொன்றுக்கு 20 கன மீட்டருக்கும் குறைவாக தண்ணீரைப் பயன்படுத்தும்
வீடுகளுக்கான குறைந்தபட்ச விகிதத்தில் மாற்றமில்லை.
அக்குடும்பங்களுக்கு ஒரு கன மீட்டருக்கு 65 சென் என்ற விகிதம் நீடிக்கிறது; தொகையாகப் பார்த்தால் ஒரு வீட்டுக்குக் குறைந்தது RM6.50 கட்டணம் விதிக்கப்படும். எனினும், 20 முதல் 35 கன மீட்டர் வரை நீர் பயன்பாட்டைக் கொண்ட குடும்பங்கள் 30 சென் கூடுதலாக, ஒரு கன மீட்டருக்கு RM1.62 செலுத்தும்.
அதுவே 35 கனமீட்டருக்கும் கூடுதலாக தண்ணீரைப் பயன்படுத்துவோருக்கு 88 சென் உயர்த்தப்பட்டுள்ளது; அடுத்த மாதம் தொடங்கி அவர்கள் ஒரு கன மீட்டர் தண்ணீருக்கு RM3.51 கட்டணம் செலுத்த வேண்டும்.
வணிகக் கட்டடங்கள் மற்றும் குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கான புதியக் கட்டண விகிதம் 57 சென் அதிகரித்து ஒரு கன மீட்டருக்கு RM 3.51 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சமூக நல இல்லங்களுக்கு 10 சென் அதிகரிக்கப்பட்டு, ஒரு கன மீட்டருக்கு 76 சென்னை அவை செலுத்த வேண்டும்.
என்றாலும் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சமூக நல இல்லங்களுக்கான இந்தக் கட்டண உயர்வை, ஆண்டுக்கு RM100,000 என்ற அளவில் அரசாங்கமே ஏற்றுக் கொள்ளும்.
40 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழையக் கல்நார் குழாய்களை விரைந்து மாற்றுவதற்கு, இந்தக் கட்டண உயர்வு அவசியமென மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி சொன்னார்.