Latestமலேசியா

சீனாவில் பெற்றோரைக் காப்பாற்ற வெள்ள நீரில் 3 மணி நேரம் நீந்திச் சென்ற மகன்; குவியும் பாராட்டு

குவாங்சி, ஜூலை-20-சீனாவில் வயதான பெற்றோரின் உயிரைக் காப்பாற்ற 30 வயது இளைஞர் ஒருவர் மூன்று மணி நேரம் வெள்ள நீரில் நீந்திச் சென்ற சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கின்ஜோ எனும் கிராமத்தில் வசித்து வந்த தமது பெற்றோரின் நிலையை அறிய முற்பட்டு Xie எனும் அந்த 30 வயது இளைஞர் அத்துணிகரச் செயலைப் புரிந்துள்ளார்.

அவ்விளைஞரும் அவரது இரு உடன்பிறப்புகளும் நகர்ப்புறப் பகுதியில் தங்கியிருந்த நிலையில், பெற்றோர் கிராமத்தில் வசித்து வந்துள்ளனர்.

வெள்ளம் ஏற்பட்டிருந்த சமயம் புதிதாக அறுவடை செய்யப்பட்ட நெல்லைப் பாதுகாப்பாக எடுத்து வர வெளியே சென்ற தந்தை வீடு திரும்பவில்லை என தாயார் கூறியதை அடுத்து Xie கவலையடைந்துள்ளார்.

அதன் பிறகு பெற்றோரைத் தொடர்பு கொள்ள முடியாமல் போக அச்சமடைந்து அவர் பெற்றோரின் நிலையை அறிய மிதப்பதற்கு ஏதுவாக லாரி டயரின் உட்புறக் குழாயைப் பற்றிக் கொண்டு, தமது நண்பருடன் சேர்ந்து மூன்று மணி நேரம் நீந்திச் சென்றுள்ளார்.

அவர்கள் அங்கு சென்றடைந்த போது, ​​வெள்ள நீர் வேகமாக உயர்ந்து, அவரது தந்தை வீட்டின் மேல் தளத்தில் சிக்கிக் கொண்டிருந்தது கண்டறியப்பட்டது. தமது தந்தையைக் காப்பாற்றிய Xie நெற்பயிரைப் பாதுகாக்க உயிரைப் பணயம் வைத்த தந்தையைத் தாம் கண்டித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குளிர்ந்த வெள்ள நீரில் இருந்த போது தமக்கு பயமாக இருந்ததாகக் கூறிய Xie, மூன்று மணி நேர நீச்சல் மிகவும் சோர்வூட்டியதாகவும் தமது அனுபவத்தைக் பகிர்ந்து கொண்டார்.

தென் சீனாவின் குவாங்சி ஜுவாங் பகுதியில், இடைவிடாத கனமழை மற்றும் அணைகள் உடைந்து ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 4 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்னர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!