கோலாலம்பூர், ஏப்ரல் 9 – 6 கைத்துப்பாக்கிகள், 200 தோட்டாக்களுடன் கோலாலம்பூரில் கைதான இஸ்ரேலிய உளவாளி என நம்பப்படும் Shalom Avitan, வரும் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளான்.
மேலதிக தண்டனைக் கிடைக்க வகைச் செய்யும்
1971-ஆம் ஆண்டு சுடும் ஆயுதங்கள் சட்டத்தின் 7-வது பிரிவின் கீழ், KL Sessions நீதிமன்றத்தில் அவன் மீது குற்றம் சாட்டப்படவிருக்கிறது.
தேசிய போலீஸ் படைத் தலைவர் Tan Sri Razarudin Husain அதனை உறுதிப்படுத்தினார்.
அவன் அந்த சுடும் ஆயுதங்களை வைத்திருந்ததற்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக IGP சொன்னார்.
குடும்பத் தகராறு காரணமாக மலேசியாவில் உள்ள சக நாட்டவரைக் கொல்ல வந்ததாக அவன் கூறிக் கொண்டாலும், அது நம்பும்படியாக இல்லை.
எனவே, மாமன்னர், பிரதமர் அல்லது மற்ற முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அவன் நாட்டுக்குள் வந்திருக்கலாம் என்ற சாத்தியத்தை மறுப்பதற்கில்லை என IGP ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வேளையில், அவ்வாடவனுக்கு 6 கைத்துப்பாக்கிகளை விநியோகம் செய்ததாக நம்பப்படும் கணவன்-மனைவி நேற்று கிள்ளான் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.
அண்டை நாட்டில் இருந்து பெறப்பட்ட சுடும் ஆயுதங்களை வைத்திருந்ததாக மனைவியும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக கணவனும் குற்றச்சாட்டை எதிர்நோக்கினர்.
முறையே 42, 40 வயதான அக்கணவனும் மனைவியும் குற்றச்சாட்டை மறுத்தனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு அதிகபட்சம் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 6-க்கும் குறையாத பிரம்படியும் விதிக்கப்படலாம்.