
கோலாலம்பூர், ஏப்ரல்-10, மலேசியாவுக்கு சுற்றுப் பயணிகளாக வந்த வங்காளதேசிகள், சுகாதார அமைச்சால் அங்கீகரிக்கப்படாத மருந்துகளை விற்பனை செய்யும் சட்டவிரோத மருந்தகங்களை நடத்தி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
ஏற்கனவே பலமுறை சோதனை செய்யப்பட்ட போதிலும், இந்த உரிமம் பெறாத மருந்தாளர்கள் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த மருந்துகளின் சேவைகளுக்கு இங்குள்ள வெளிநாட்டினர் மத்தியில் அதிக கிராக்கி உள்ளது.
தங்கள் சொந்த நாட்டிலிருந்து மருந்து தேடும் வெளிநாட்டினருக்கு, குறிப்பாக வங்காளதேசிகளுக்கு மிகவும் பிரபலமான இடங்களாக தலைநகரில் பல இடங்களில் அம்மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஜாலாம் சீலாங்கில் அத்தகைய ஏராளமான மையங்கள் இயங்கி வருவதும், தகுதியில்லாத நபர்கள் மருந்தாளர்களாக ஆள்மாறாட்டம் செய்வதும், வாடிக்கையாளர்களுக்கு மருந்துச் சீட்டுகளை எழுதி தருவதுமாக உள்ளனர்.
KKM வழங்கும் மருந்து மாத்திரைகளை இந்த வங்காளதேச மருந்துகளுக்கு குணமாக்கும் சக்தி அதிகமிருப்பதாக, வெளிநாட்டினர் நம்புகின்றனர்; நம்ப வைக்கப்படுகின்றனர்.
அதிகாரிகள் கண்களின் படாமலிருக்க, அந்த ‘மருந்தகச் சேவை’ குறித்து வெளியில் வங்காள மொழியில் பெயர்ப்பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சால் அங்கீகரிக்கப்படாத மருந்து மாத்திரைகளை உட்கொள்வது உயிருக்கே ஆபத்தாய் முடியலாம்.
எனவே, அவற்றை விற்போருக்கு 25,000 ரிங்கிட் வரையிலான அபராதமும் 3 ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
இரண்டாவது தடவையாக அதே குற்றத்தைப் புரிந்தால், அபராதம் 50,000 ரிங்கிட்டுக்கும் சிறைத் தண்டனை 5 ஆண்டுகளுக்கும் உயரும்.
இதுவே நிறுவனங்களாக இருந்தால், முதல் குற்றத்திற்கு 50 ஆயிரம் ரிங்கிட்டும், மீண்டும் புரிந்தால் 100,000 ரிங்கிட்டும் விதிக்கப்படலாம்.