
செர்டாங், மார்ச்-19-சமூக ஆர்வலர் Cikgu Chandra வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைதான சந்தேக நபர் ஒருவர், தடுப்புக் காவலில் போலீஸார் தன்னை அடித்து சித்ரவதை செய்ததாக பரபரப்பு புகாரளித்துள்ளார்.
செர்டாங் போலீஸ் தலைமையகத்தில் விசாரணை நடந்தபோது, குறைந்தது 2 போலீஸார் பூட் காலணிகளால் தலையில் அடித்ததாகவும், மேலுமொருவர் தனது கால் விரல்களுக்கு இடையில் பென்சிலை வைத்து முறுக்கியதாகவும், 40 அவ்வாடவர் போலீஸில் புகார் செய்துள்ளார்.
இரு கைகளையும் பின்பக்கமாக வைத்து கட்டி, வலியால் தாம் துடிக்கும் அளவுக்கு சில போலீஸ்காரர்கள் காலால் மிதுத்ததாகவும் அவர் சொன்னார்.
தடுப்புக் காவல் முடிந்து விடுவிக்கப்பட்ட பிறகு சுபாங் ஜெயாவில் அப்புகார் செய்யப்பட்டதாக, அவரின் வழக்கறிஞர் S.வினேஷை மேற்கோள்காட்டி மலேசியா கினி செய்தி வெளியிட்டுள்ளது.
தன் கண்களை கட்டிவிட்டு, கன்னத்தில் அறைந்ததோடு, வலது காதில் மின்சார அதிர்ச்சியை கொடுத்ததாகவும் அவர் தமது புகாரில் கூறியுள்ளார்.
ஆட்களை அடையாளம் தெரியவில்லை என்றாலும், தம்மை சித்ரவதை செய்தவர்களில் ஒருவர் மலாய்க்காரர் என்றும் மற்றொருவர் மலாய்க்காரர் அல்லாதவர் என்றும் அவர் சொன்னார்.
குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு தம்மை மிரட்டவே அவர்கள் அவ்வாறு சித்ரவதை செய்ததாக அவர் கூறியுள்ள நிலையில், அடுத்து, மலேசிய மனித உரிமை ஆணையமான SUHAKAM-மிலும் தனது கட்சிக்காரர் புகார் செய்ய திட்டமிட்டிருப்பதாக வினேஷ் கூறினார்.
இவ்வேளையில், அவ்வாடவரின் போலீஸ் புகார் கிடைத்திருப்பதாகவும், அது தொடர்வில் விசாரணைத் தொடங்கியுள்ளதாகவும் சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ Shazeli Kahar தெரிவித்துள்ளார்.
Cikgu Chandra வீட்டில் பெட் ல் குண்டுகள் வீசப்பட்டது தொடர்பான விசாரணைக்கான கைதான 12 பேரில் இவரும் ஒருவராவார்.



