செனாவாங், ஏப்ரல்-5, நெகிரி செம்பிலான் செனாவாங்கில் புயல் காற்றின் போது சாலையில் சென்றுக் கொண்டிருந்த காரின் மீது பெரிய மரமொன்று வேரோடு சாய்ந்து விழுந்ததில், காரோட்டி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி மாண்டார்.
Jalan Senawang-Paroi-யில் தாமான் ரஷிடா உத்தாமா அருகே நேற்று மாலை 4 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
அப்போது அப்பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ததாக செனாவாங் தீயணைப்பு மீட்புத் துறையின் தலைவர் Mohd Nazri Azis தெரிவித்தார்.
தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போது, அங்கு பெரோடுவா வீவா காரின் ஓட்டுநர் இருக்கையில் ஆடவர் சிக்குண்டதைக் கண்டதாக அவர் சொன்னார்.
“மரத்தை வெட்டி, காரின் மேலிருந்து அதை அகற்றி காரோட்டியை வெளியில் கொண்டு வந்தோம். ஆனால் அங்கிருந்த மருத்துவக் குழு 48 வயது அவ்வாடவர் உயிரிழந்து விட்டதை உறுதிச் செய்தது” என்றார் அவர்.
மேல் நடவடிக்கைக்காக போலீசிடம் ஒப்படைக்கப்பட்ட
அவரின் உடல், துவாங்கு ஜஃபார் மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டதாக அறியப்படுகிறது.