
கோலாலம்பூர், மே 5 – MyNIISe எனப்படும் நாட்டின் நுழைவாயில்களில் செயல்படுத்தப்படவுள்ள தேசிய ஒருங்கிணைந்த குடிநுழைவு அமைப்பு செப்டம்பர் மாதம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் நிலையில், பயணிகளைச் சோதிக்கும் செயல்முறையை நான்கு முதல் ஐந்து வினாடிகளுக்குள் முடிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் திறமையானதாகக் கருதப்படும் இந்த அமைப்பு, நாட்டின் எல்லைக் கட்டுப்பாட்டை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுதீன் நசுட்டியோன் இஸ்மாயில் கூறினார்.
மலேசிய குடிநுழைவு அமைப்புக்கு மாற்றாக வரும் இந்த புதிய அமைப்பு முக அங்கீகாரம் , கியூஆர் குறியீடு , கடப்பிதழ் ஆகிய மூன்று முறைகள் மூலம் அனுமதி வழங்க ஏதுவாக படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
எனவே, இது மிகவும் முக்கியமானது. ஏனென்றால், பிற்காலத்தில் விமான நிலையத்திலிருந்து புறப்படும்போது அல்லது நாட்டிற்கு வருகை புரிவது என எதுவாக இருந்தாலும், விமான நிலைய நெரிசலை நாம் எதிர்கொள்ள விரும்ப மாட்டோம் என்பதை உணர்வோம் என இன்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் அலுவல் பணி நிமித்த வருகைக்குப் பின் அவர் செய்தியாளர்களிடம் இத்தகவலை வெளியிட்டார்.
பழைய அமைப்பிலிருந்து புதிய அமைப்புக்கு மாறும் இந்தக் காலகட்டத்தில் தொழில்நுட்ப இடையூறுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை சைபுடின் நிராகரிக்கவில்லை.



