
லண்டன், ஆகஸ்ட்-31- சைப்ரஸ் நாட்டின் வட கடலோரப் பகுதியில் 267பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் சென்று கொண்டிருந்த ஃபெர்ரி படகு கடலில் கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். வட சைப்ரஸில் உள்ள Kyrenia துறைமுகத்தில் இருந்து துருக்கியின் Tasucu துறைமுகத்தை நோக்கிப் புறப்பட்ட Filojet என்ற அந்த ஃபெர்ரி பயணிகள் படகு, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கவிழ்ந்து மூழ்கியதாக ABC நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
அப்படகு கடற்கரையிலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் இருந்த போது, உள்ளூர் நேரப்படி காலை 11.30 மணி முதல் மதியம் 12.00 மணிக்குள் அவசர உதவிக்கான அழைப்பு கிடைத்ததாக அப்படகுச் சேவையை இயக்கும் துருக்கியக் கப்பல் நிறுவனமொன்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
துருக்கி மற்றும் வடக்கு சைப்ரஸ் கடலோரக் காவல்படையினர், ஹெலிகாப்டர்கள் மற்றும் உள்ளூர் படகுகளின் உதவியுடன் இதுவரை 241 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர். காணாமல் போன 18 பேரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக துருக்கியின் ஆக்கிரமிப்பில் உள்ள வட சைப்ரஸின் தலைவர் Tufan Erhurman தெரிவித்தார்.
வட சைப்ரஸின் நான்கு கடலோரக் காவல் படை கப்பல்கள், ஒரு பயணிகள் கப்பல் ஆகியவற்றுடன், துருக்கியின் ஐந்து கடலோரக் காவல் படை கப்பல்கள், கடற்படைக் கப்பல்கள், இரு ஹெலிகாப்டர்கள் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அச்சம்பவத்தை அடுத்து வட சைப்ரஸ் பகுதியில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு தேசிய துக்கம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.



