Latestமலேசியா

சோதனைகளைத் தாண்டி 80 ஆண்டுகள்; மீண்டும் எழுச்சி காணும் ம.இ.கா” — விக்னேஸ்வரன்

கோலாலம்பூர், மே-22-நேற்றும், இன்றும் இனி என்றும் இந்தியச் சமுதாயத்தை முன்னிறுத்தி சேவை செய்வதே ம.இ.கா-வின் நோக்கம் எனவும், மாரியம்மன் மடியில் தாலாட்டி பிறந்த கட்சி ம.இ.கா எனவும் அதன் தேசியத்தலைவர் தான் ஸ்ரீ விக்னேஸ்வரன் கட்சியின் 80-ஆம் ஆண்டு நிறைவு விழா கூட்டுப்பிரார்தனையின் போது மிக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் முதுபெரும் கட்சிகளில் முக்கியமானதான ம.இ.காவின் 80-ஆம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டங்கள், அதன் பிறப்பிடமான கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனையுடன் நேற்று அதிகாரப்பூர்வமாக அவரால் தொடக்கி வைக்கப்பட்டது.

நேற்று மாலை நாதஸ்வர கச்சேரி மற்றும் பரதநாட்டியத்துடன் தொடங்கிய இந்நிகழ்வில், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் மற்றும் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் ம.இ.கா தேசிய உதவித் தலைவருமான டத்தோ T. முருகையாவும் உடனிருந்தார்.

சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்களும் கட்சித் தொண்டர்களும் பங்கேற்ற இந்த நிகழ்வில், முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்குக் கௌரவிப்பு செய்யப்பட்டது.

இந்த 80–ஆண்டு கால காலட்டத்தில் கட்சி பல்வேறு சோதனைகளைக் கடந்து வந்தாலும் தொடர்ந்து களத்தில் மக்கள் பணியாற்ற இறைவனின் குறிப்பாக அம்மனின் மகா சக்தி எப்போதும் துணை நின்றுள்ளதாக விகனேஸ்வரன் தெரிவித்தார்.

“ம.இ.கா மக்களுக்கான அமைப்பாக உள்ளது என்றும், அதனைக் கட்டிக் காக்கும் நல்லத் தலைவராக விக்னேஸ்வரன் விளங்குவதாகவும்” முன்பாக பேசிய தான் ஸ்ரீ நடராஜா தமதுரையில் குறிப்பிட்டார்.

இவ்வேளையில், நிகழ்வுக்குப் பிறகு வணக்கம் மலேசியாவிடம் பேசிய துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன், கட்சியின் வளர்ச்சி பற்றியும் எதிர்கால சவால்களை எதிர்கொள்ள எப்படி செயல்படும் என்பது பற்றியும் விவரித்தார்.

நிகழ்வைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த டத்தோ T முருகையாவோ, கிடைத்த வரவேற்புக் குறித்து மகிழ்ச்சித் தெரிவித்தார்.

ம.இ.காவின் 80-ஆம் ஆண்டு விழா ஆலயத்தில் தொடங்கியிருப்பதால், திட்டமிடப்பட்டுள்ள கொண்டாட்டங்கள் இன்னும் களைக் கட்டும் என்றார் அவர்.

மற்றோர் உதவித் தலைவரான டத்தோ எம். அசோஜன், 80 ஆண்டு கால கட்சியின் மகத்துவம் குறித்து பெருமிதம் தெரிவித்தார்.

பூஜை, தீபாராதனை நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டதோடு நிகழ்வு நிறைவுற்றது.

இவ்விழாவைத் தொடர்ந்து ஜூலை மாதம் வரை குடும்ப தினம், மருத்துவ முகாம், விளையாட்டுப் போட்டிகள், மற்றும் பிரம்மாண்டமான 80-ஆம் ஆண்டு நிறைவு ஓட்டப்பந்தயம் ஆகிய பல்வேறு அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் நாடு தழுவிய அளவில் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் களத்தில் எத்தனையோ சவால்களுக்கு மத்தியில் இந்தியர்களின் தாய்க் கட்சியாக இன்னமும் ஆலமரமாய் வீற்றிக்கும் ம.இ.காவுக்கு இந்த 80-ஆம் ஆண்டு நிறைவு விழா, மீட்சிக்கான தொடக்கமாக அமையுமென தொண்டர்கள் நம்புகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!