
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 5 – இன்று காலை கெடா ஜித்ராவிலுள்ள வடக்கு-தெற்கு விரைவுச்சாலை (பிளஸ்) நுழைவாயில் பகுதியில், போலீசாருக்கும் குண்டர் கும்பலுக்கும் ஏற்பட்ட சண்டையில் 2 குற்றவாளிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று கெடா காவல்துறைத் தலைவர் ஃபிசோல் சாலே (Fisol Salleh) கூறியுள்ளார்.
அந்தப் பகுதியில் ரோந்து சென்ற காவல்துறை அதிகாரிகள் நான்கு சக்கர வாகனம் ஒன்று சந்தேகத்திற்கிடமான முறையில் ஓட்டிச் செல்லப்படுவதைக் கண்டு சந்தேக நபர்களிடம் வாகனத்தை நிறுத்த உத்தரவிட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் ஒத்துழைக்காத நிலையில், போலீசார் வாகனத்தை நோக்கி துப்பாக்கியில் சுட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திலேயே வாகனத்திற்குள் இருந்த இருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.
வாகனத்தை சோதனை செய்ததில், முன்னதாக அக்கும்பல் குற்றவியல் செயல்களுக்கு பயன்படுத்திய இரண்டு ரிவால்வர்கள், ஒரு தானியங்கி கைத்துப்பாக்கி, தோட்டாக்கள், மற்றும் கத்தி ஆகிய பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில் மாண்ட 41 வயதான ஒரு சந்தேக நபருக்கு 40க்கும் மேற்பட்ட குற்றப் பதிவுகள் இருப்பதாகவும், மற்றொரு நபரின் அடையாளம் இன்னும் தெளிவாக தெரியப்படவில்லை என்றும் அறியப்படுகின்றது.
இதற்கிடையில், சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்ற புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) செயல் இயக்குநர் ஃபாடில் மார்சஸ், இந்த இருவரும் பல்வேறு கடுமையான குற்றங்களில் ஈடுபட்ட ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் அக்குழுவில் 30க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருப்பதாகவும் அறியப்படுகின்றது.
மேலும் இந்த இரு சந்தேக நபர்களின் உடல்களும் அலோர் செதாரில் உள்ள சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன என்றும் இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது என்று ஃபிசோல் குறிப்பிட்டுள்ளார்.