
வாஷிங்டன், ஜூலை-4 – அமெரிக்காவில் ஜூலை 4-ஆம் தேதி சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் களைகட்டி வரும் வேளையில், நாட்டின் மத்திய மற்றும் கிழக்கு மாநிலங்களை வாட்டி வதைக்கும் கடும் வெப்ப அலையால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மெக்சிகோ வளைகுடாவிலிருந்து வீசும் வெப்பம் மற்றும் ஈரப்பதம் கலந்த காற்று, ஒரு “வெப்ப மாடமாக” (Heat Dome) மாறி, அமெரிக்காவின் சுமார் 30 மாநிலங்களை ஆக்கிரமித்துள்ளது.
இதனால் சிக்காகோ, Detroit, வாஷிங்டன், பிலடெல்ஃபியா (Philadelphia) மற்றும் நியூ யோர்க் உள்ளிட்ட நகரங்களில் வெப்பநிலை 38 பாகை செல்சியஸைத் தாண்டியுள்ளது.
காற்றின் ஈரப்பதம் காரணமாக, இது 46 பாகை செல்சியஸ் வரை உணர்வதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்தக் கடும் வெப்பத்தால், நியூ யோர்க்கில் 2012-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக வெப்பநிலை 100 பாகை பாரன்ஹீட்டைத் தாண்டியுள்ளது.
மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பிலடெல்ஃபியாவில் அணிவகுப்புகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
Boston நகரில் வானவேடிக்கை நிகழ்ச்சிகள் முன்னதாகவே நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளன.
மேலும், இரயில் தண்டவாளங்கள் வெப்பத்தால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், பல இரயில் சேவைகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
பொது மக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்கவும், போதுமான அளவு தண்ணீர் அருந்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பருவநிலை மாற்றத்தால் இத்தகைய கடுமையான வெப்ப அலைகள் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.



