
தஞ்சோங் மாலிம், செப்-11-பேரா, தஞ்சோங் மாலிமில் முழுமையாகப் பிரித்து இணைக்கும் ஆலையை அமைக்கும் திட்டத்தைத் தொடரப் போவதில்லை என BYD மலேசியா தெரிவித்துள்ளது. உள்ளூர் வாகனத் துறைக்கு ஏற்ற தீர்வை உருவாக்கும் வகையில் இந்த உத்தி மாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக நிர்வாக இயக்குநர் ஜேக்கப் மா தெரிவித்தார்.
எனினும், உள்ளூர் பணிகள் குறித்து விற்பனையாளர்களுடன் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளது. மலேசிய வாகனச் சூழலமைப்புடன் இணைந்து செயல்பட நிறுவனம் விரும்புகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் கடந்த ஆண்டே தொடங்கி விட்டதாகவும் மா கூறினார்.
சில மாடல்களின் கையிருப்பு குறைவாக இருந்தாலும், ஒட்டுமொத்த வாகனம் கையிருப்பு போதுமானதாக உள்ளதாக அவர் தெரிவித்தார். மலேசியாவில் BYD அறிமுகமானது முதல் 35,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அவற்றில் இவ்வாண்டு முதல் பாதியில் மட்டும் விற்கப்பட்ட 7,500-க்கும் மேற்பட்ட வாகனங்களும் அடங்கும். அதிக தேவை ஏற்பட்டால் மட்டுமே இந்தோனேசியாவிலிருந்து வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் மா தெரிவித்தார்.
இதனிடையே, மலேசியாவில் உள்ளூர் உற்பத்திக்கான புதிய வாய்ப்புகளை BYD தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது. கெடா, கூலிமில் உள்ள Inokom தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் வாகனங்களை ஒன்றிணைப்பது குறித்தும் நிறுவனம் பரிசீலித்து வருவதாக முன்னதாக தகவல் வெளியானது.



