Latestமலேசியா

தமிழ்க் கல்வியாளர்களைச் சிறப்பிக்கும் ‘தகைமை’ விருது விழா ; விண்ணப்பிக்கும் இறுதி நாள் ஜூலை 31 வரை நீட்டிப்பு

கோலாலாம்பூர், ஜூலை-9 -மலேசியாவில் தமிழ்க்கல்வி மற்றும் தமிழ்மொழிக்காகத் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் கல்வியாளர்களைக் கௌரவிக்கும் நோக்கில், ‘தகைமை தமிழ்க் கல்வி ஆளுமை’ இயக்கம் முதன்முறையாக ‘TAGAMAI விருதுகள் 2026’ எனும் பிரம்மாண்ட விழாவை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஷா ஆலாம், மிட்லண்ட்ஸ் மாநாட்டு மையத்தில் வரும் செப்டம்பர் 20-ஆம் தேதி இவ்விழா நடைபெறவுள்ள நிலையில் இதற்கு விண்ணப்பிப்பதற்கான இறுதிநாளை நீட்டித்துள்ளது ஏற்பாட்டுக் குழு.

நாட்டில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்து வரும் சூழலில், தரம் மற்றும் நம்பிக்கையை மேம்படுத்தவும், கல்வியாளர்களை ஊக்குவிக்கவும் இந்த விருது விழா ஒரு முக்கிய முயற்சியாக அமைவதாக, விழா ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த Dr இளந்தமிழ் மருதை கூறினார்.

மலேசியாவில் தமிழ்க் கல்வியின் எதிர்காலத்தை வடிவமைப்பதிலும், தமிழ்மொழித் தரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டுச் செல்வதிலும் நமது ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் பங்கு அளப்பரியது. அவர்களின் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அர்ப்பணிப்பு தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

தமிழ்ப் பள்ளியின் சிறந்த தலைமைத்துவ விருது, தமிழ்ப் பள்ளியின் சிறந்த ஆசிரியர் விருது, சிறந்த தமிழ்மொழி ஆசிரியர் விருது, சிறந்த இடைநிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் விருது, சிறந்த கல்லூரி/பல்கலைக்கழக தமிழ் விரிவுரையாளர் விருது, தமிழ்க் கல்வி வாழ்நாள் சாதனையாளர் விருது, தமிழ் மொழி/தமிழ்க் கல்வி வளர்ச்சிக்கான சிறப்பு விருது ஆகிய 7 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன.

பேராசிரியர் டத்தோ Dr என்.எஸ். ராஜேந்திரன் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் 7 பிரிவுகளின் கீழ் விருதுகளும், 5,000 முதல் 10,000 ரிங்கிட் வரையிலான ரொக்கப் பரிசுகளும் பதக்கங்களுடன் வழங்கப்படவுள்ளதாக இழந்தமிழ் சொன்னார்.

இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

எனவே, தகுதியானவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!