
ஷா ஆலாம், ஜூலை.09-Bantingங்கில் கடந்த திங்கட்கிழமை இடைநிலைப்பள்ளியொன்றில் சக மாணவியைக் கத்தியால் குத்தியது தொடர்பில் கைதான 15 வயது மாணவி தாம் பகடி வதைக்கு ஆளானதாகக் கூறியிருக்கிறார். கத்தியால் குத்தப்பட்ட மாணவி உட்பட மேலும் சில மாணவர்கள் அச்செயலில் ஈடுபட்டனர். அதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே தாம் அவ்வாறு செய்ததாக அம்மாணவி விசாரணையில் தெரிவித்திருப்பதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் Datuk Shazeli Kahar குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அம்மாணவி குறிப்பிட்ட மாணவர்களிடம் இருந்து இதுவரை பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்களில் அவ்வாறு நிகழ்ந்ததற்கான அம்சங்கள் ஏதும் கண்டறியப்படவில்லை. இருப்பினும், அவ்விஷயத்தை முழுமையாக விசாரிக்க காவல் துறைக்கு அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
சுகாதாரப் பிரச்சினைகள் காரணமாக, சந்தேக நபர் எட்டு மாதங்களாகப் பள்ளிக்குச் செல்லவில்லை என்றும், வீட்டிலிருந்தே படித்து வந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அம்மாணவி, கடந்த ஆண்டு இறுதியில் பள்ளி கட்டிடத்திலிருந்து குதித்த விவரமும் கண்டறியப்பட்டுள்ளது என Shazeli Kahar கூறினார்.
இவ்வேளையில் விசாரணைக்கு ஏதுவாக அம்மாணவியின் தடுப்புக் காவலை நீட்டிக்க அனுமதி பெறப்படும் என அவர் தெரிவித்தார். அம்மாணவியின் தடுப்புக் காவல் நாளையுடன் முடிவடைகிறது.
இதனிடையே 16 முறை கத்திக் குத்துக்கு ஆளான மாணவி தற்போது சீரான நிலையில் இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் Shazeli மேலும் குறிப்பிட்டார்.



