
புத்ராஜெயா, ஜூலை 9 – ஜப்பானுக்கு அனுப்பப்பட்ட டாரா, அமோய், கெலாட் (DAK) என்ற மூன்று யானைகளின் இடமாற்றம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மட் (Nik Nazmi Nik Ahmad) மீது சுமத்தப்பட்ட 3 மில்லியன் ரிங்கிட் ஊழல் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC
தெரிவித்துள்ளது.
MACC தலைமை ஆணையர் டத்தோ ஶ்ரீ அப்துல் ஹலிம் அமான் (Datuk Seri Abd Halim Aman) கூறுகையில், இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் நிக் நஸ்மி அல்லது அவருடன் தொடர்புடைய எந்த நிறுவனத்திற்கும் சந்தேகத்திற்கிடமான பணப் பரிமாற்றம் அல்லது நிதி ஓட்டம் எதுவும் கண்டறியப்படவில்லை என்றார். பணப் பரிவர்த்தனை தொடர்பான ஆய்வுகளிலும் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும், இந்த வழக்கில் ஒரு அரசு ஊழியர், ஓய்வுபெற்ற முன்னாள் அரசு அதிகாரி மற்றும் இரு நிறுவன உரிமையாளர்கள் உட்பட நான்கு பேரிடம் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் இருப்பதால், அவர்கள் மீது விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும், மூன்று யானைகளையும் 25 ஆண்டுகளுக்கு ஜப்பானின் ஒசாகா உயிரியல் பூங்காவிற்கு அனுப்பிய ஒப்பந்த காலம் நியாயமானதே என்று SPRM தெரிவித்துள்ளது. யானைகளின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு இந்த காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டதாகவும் விளக்கமளித்தது.



