
பிரிட்டன், ஜூலை.09-ஓர் இந்தியரான பேராசிரியர் நிஷான் கனகராஜாவுக்கு பிரிட்டனில் மாவீரர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. Leicester பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான அவருக்கு Windsor கோட்டையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மன்னர் மூன்றாம் சார்லஸ் ‘நைட்’ விருது வழங்கி சிறப்பித்தார். உயர்க்கல்விக்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பு, குறிப்பாக அனைவரையும் உள்ளடக்குவதை ஊக்குவித்தப் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு அவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே மன்னர் சார்லஸிடமிருந்து அந்த உயரிய விருதைப் பெற்றதில் தாம் மிகுந்த பெருமையடைவதாக இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட நிஷான் கனகராஜா கூறியுள்ளார். கல்வி மற்றும் அது வழங்கும் வாய்ப்புகளின் காரணமாகவே இந்த அடைவுநிலை சாத்தியமாகியுள்ளது என்றாரவர். தனது வாழ்க்கைப் பயணத்தை நினைவுகூர்ந்த அவர், ஒரு காலத்தில் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த ஒரு சிறுவனாக இருந்து, பிரிட்டிஷ் மன்னரால் அங்கீகரிக்கப்படும் நிலைக்கு உயர்ந்தது நெகிழ்ச்சியடைய வைப்பதாகக் குறிப்பிட்டார்.
பேராசிரியர் கனகராஜா, உயர்கல்விக்கான அணுகலை மேம்படுத்துதல், பின்தங்கிய மாணவர்களுக்கு ஆதரவளித்தல் மற்றும் பன்முகத்தன்மையை ஊக்குவித்தல் போன்ற பல்வேறு முயற்சிகளுக்குத் தலைமை தாங்கியுள்ளார். அவர் அனைத்துலக பங்காளித்துவ முயற்சிகளை முன்னெடுத்ததோடு, பிரிட்டனில் பல தேசிய உயர்கல்வித் தலைமைப் பதவிகளிலும் இருந்துள்ளார்.



