
கோலாலாம்பூர், ஏப்ரல்-28-மலேசிய இந்திய உருமாற்றுப் பிரிவான ‘மித்ரா’, தர்மா மடானி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை 462 ஆலயங்களுக்கு 9.24 மில்லியன் ரிங்கிட் நிதியை விநியோகித்துள்ளது.
ஆலயங்களின் மேம்பாடு மற்றும் சமூக நலனை நோக்கமாகக் கொண்டு இந்த நிதி வழங்கப்படுகிறது.
அவ்வகையில், இன்று இரண்டாம் கட்டமாக 300 ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்டை, மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
பிரிக்ஃபீல்ட்ஸ் கலா மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், மித்ரா தலைமை இயக்குவர் ரவீந்திரன் நாயர் உள்ளிடோர் கலந்துகொண்டனர்.
கடந்த ஜனவரி மாதம் முதற்கட்டமாக 126 ஆலயங்களுக்கு 3.24 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எந்தவொரு விண்ணப்பமும் நிராகரிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட ரமணன், ஆவணங்கள் முழுமையடையாத ஆலயங்களுக்கு மித்ரா அதிகாரிகள் நேரடியாக வழிகாட்டுதல் வழங்குவார்கள் என, செய்தியாளர்களிடம் கூறினார்.
இதன் மூலம் 3-ஆவது மற்றும் 4-ஆவது கட்ட நிதி ஒதுக்கீடுகள் உறுதிச் செய்யப்படும் என்றார் அவர்.
இந்தியச் சமூகம் அரசாங்கத்தின் சலுகைகளையும், ‘வெற்றி மடானி’ போன்ற தொழில்முறை மேம்பாட்டுத் திட்டங்களையும் எளிதில் அணுகும் வகையில், மித்ராவின் கீழ் ஒரு ‘ஓரிடச் சேவை மையத்தை’ (One-Stop Centre) உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
இவ்வேளையில், மித்ரா வாயிலான அரசாங்கத்தின் இவ்வுதவிகள், நீண்டகால முதலீடுகள் என, ரவீந்திரன் நாயர் தெரிவித்தார்.
இதே நிகழ்ச்சியில் பங்கேற்ற பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவர் Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாச்சலம், இந்த விதி ஒதுக்கீடு மடானி அரசாங்கத்தின் கடப்பாட்டைப் பிரதிபலிப்பதாக சொன்னார்..
நாடு முழுவது ம் 1,000 ஆலயங்கள் பயனடையும் வகையில் ஒதுக்கப்பட்டுள்ள இந்த 20 மில்லியன் ரிங்க்கிட்டில், ஒவ்வோர் ஆலயத்திற்கும் 20,000 ரிங்க்கிட் நித்யுதவி வழங்கப்படுகிறது.



