
கோலாலம்பூர், மார்ச்-14 – கோலாலம்பூரில் உள்ள இலங்கை உயர் ஆணையத்தின் அலுவலகம், ஜாலான் அம்பாங் பகுதியில் நேற்று தனது வருடாந்திர இஃப்தார் நோன்புத் துறப்பு நிகழ்ச்சியை மீண்டும் ஒருமுறை நடத்தியது.
இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் மத சகிப்புத்தன்மை மற்றும் அமைதியான கூட்டு வாழ்வை வலியுறுத்துவதாகும்.
இலங்கை உயர் ஆணையத்தின் இடைக்கால உயர் ஆணையர் M.I. Mohamed Rizvi, இந்நிகழ்வில் சுமார் 150 விருந்தினர்கள் கலந்து கொண்டதாக தெரிவித்தார்.
மதத் தலைவர்கள், வணிகத் துறையினர் மற்றும் இந்திய, மலாய் சமூக நண்பர்கள் உள்ளிட்டோரும் அவகளில் அடங்குவர்.
பல்வேறு மதங்களைச் சேர்ந்த தலைவர்கள் ஒரே இடத்தில் இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது, தூதரகம் முன்னிறுத்த விரும்பும் இன, மத ஒற்றுமையின் முக்கிய சின்னமாக இருப்பதாக Rizvi கூறினார்.
தவிர, தற்போது உலகில் நிலவி வரும் பல்வேறு மோதல்களை எதிர்கொள்வதில், இவ்வகையான இஃப்தார் நிகழ்வுகள் இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையிலான பரஸ்பர புரிதலும் ஒற்றுமையும் இன்னும் சாத்தியமே என்பதை நிரூபிப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.



