தாபுங் ஹாஜி விவகாரத்தை இன, மதப் பிரச்சினையாக்க வேண்டாம் – அன்வார்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 21 – பிரதமர் அன்வார் இப்ராஹிம், தாபுங் ஹாஜியில் கண்டறியப்பட்ட முறைகேடுகள் மற்றும் தவறுகளுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுப்பது, அந்த நிறுவனம் இஸ்லாமிய அடையாளத்தைக் கொண்டிருப்பதால் அல்ல என்றார்.
காஜாங்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், எந்த நிறுவனத்தில் முறைகேடு அல்லது தவறு கண்டறியப்பட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதை இன அல்லது மதப் பிரச்சினையாக பார்க்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
தாபுங் ஹாஜி விவகாரம் குறித்து PAS தலைவர் அப்துல் ஹாடி அவாங், மலாய்-முஸ்லிம்களுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில் இந்த விவகாரம் பெரிதுபடுத்தப்படுவதாக நேற்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், மலாய்க்காரர்களுடன் நெருக்கமாக தொடர்புடைய நிறுவனமான FELDA-விலும் கடந்த கால முறைகேடுகளுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்ததை அன்வார் சுட்டிக்காட்டினார். மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் மீண்டும் ஏற்படாமல் தடுக்க FELDA தொடர்பாக வெள்ளை அறிக்கையும், சிறப்பு பணிக்குழு மற்றும் குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.



