
மலாக்கா, மே-9-2026-ஆம் ஆண்டின் தென் மண்டல அளவிலான ஒற்றுமை வாரக் கொண்டாட்டம், பல்வேறு இனங்களின் கலாச்சார சங்கமமாய் மலாக்காவில் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.
நேற்று தொடங்கி 3 நாள் விழாவாக நாளை ஞாயிற்றுக் கிழமை வரை, காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இக்கொண்டாட்டம் களைக் கட்டுகிறது.
சுதந்திர பிரகடன நினைவு சதுக்கத்தில் நடைபெறும் இந்த விழாவில், பாரம்பரியக் கலைகளைப் பறைசாற்றும் இனக்குழு நடனப் போட்டிகள் மற்றும் தேசத்தலைவர்களைக் கௌரவிக்கும் ‘ஒற்றுமை ஆளுமை’ போட்டிகள் முக்கிய அம்சமாக விளங்குகின்றன.
அதோடு, பல்வேறு சமூக நடவடிக்கைகள், கண்காட்சி, போட்டிகளும் உண்டு.
தவிர, ‘FoodUnites’ உணவுச் சந்தை மூலம் மலாக்கா, நெகிரி செம்பிலான் மற்றும் ஜோகூர் மாநிலங்களின் பாரம்பரிய உணவுகள் ஒரே இடத்தில் பரிமாறப்படுகின்றன.
மக்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதும், மறைந்து வரும் கலாச்சார பாரம்பரியங்களைப் பாதுகாப்பதும் இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.
பல்லின மக்களின் பங்களிப்புடன் நடைபெறும் இந்தச் கொண்டாட்டம், நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
எனவே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வார இறுதி விடுமுறையை நல்ல முறையில் கழிக்குமாறு, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.



