
கோலாலம்பூர், நவம்பர்-1,தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே தகவல் தொழில்நுட்பத் திறனையும் புத்தாக்கச் சிந்தனையையும் வளர்க்கும் நோக்கில், தேசிய அளவிலான ICT Carnival 2026 போட்டி நேற்று கோலாலம்பூரில் நடைபெற்றது.
STH ICT Consultant ஏற்பாட்டில், APU எனப்படும் ஆசிய பசிஃபிக் பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 7 மாநிலங்களைச் சேர்ந்த 41 தமிழ்ப்பள்ளிகள் பங்கேற்றன.
மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையான மஹிமாவின் தலைவரும், ஸ்ரீ மகா மாரியம்மன் தேவாஸ்தான அறங்காவலருமான டத்தோ N. சிவகுமார் நிகழ்வுக்கு சிறப்பு வருகைத் தந்தார்.
கடந்த 2020-ஆம் ஆண்டு 20 பள்ளிகளுடன் தொடங்கப்பட்ட இம்முயற்சி, தற்போது 41 பள்ளிகளுக்கு விரிவடைந்துள்ளது.
இந்நிலையில், எதிர்காலத் தொழில்நுட்பச் சவால்களை எதிர்கொள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களைத் தயார்படுத்துவதில் இதுபோன்ற போட்டிகள் முக்கியப் பங்காற்றுவதாக மலேசியத் தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத் தலைவர் பழனி சுப்பையா தெரிவித்தார்.
தகவல் தொழில்நுட்ப புதிர்ப் போட்டியில் ஹீவுட் தமிழ்ப்பள்ளியும், கைப்பேசிச் செயலி உருவாக்கும் போட்டியில் Sungai Choh தமிழ்ப்பள்ளியும் முதலிடத்தை வென்றன.
வெற்றியாளர்களுக்கு டத்தோ சிவகுமார் பரிசுகளை எடுத்து வழங்கினார்.
மாணவர்களின் தொழில்நுட்ப ஆர்வத்தையும் திறனையும் வளர்க்கும் நோக்கிலான இத்தகையப் போட்டிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என வணக்கம் மலேசியாவிடம் அவர் கூறினார்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான திலகவதி பாலசந்திரன், தொழில்நுட்ப உலகத்தை நோக்கி நகரும் தற்காலச் சூழலில், தமிழ்ப் பள்ளி மாணவர்கள் எதிலும் பின்தங்கி விடக் கூடாது என்பதே தமது முக்கிய இலக்கு என்றார்.
ஆறாவது ஆண்டாக நடத்தப்பட்ட இப்போட்டி, எதிர்காலத்திலும் சிறப்பாக நடத்தப்படும் என்ற உறுதியோடு போட்டி இனிதே நிறைவுற்றது.



