
கோலாலம்பூர், மார்ச்-25- மஸ்ஜிட் இந்தியா தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலயத்திற்கும் நில உரிமையாளரான Jakel குழுமத்திற்கும் இடையிலான சர்ச்சை, ஒரு முக்கியமானத் தேவையை எடுத்துரைக்கிறது.
அதாவது மலேசியாவில் இந்து மத விவகாரங்களை நிர்வகிக்க ஒரு முறையான அரசு அமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென, உரிமைக் கட்சியின் தலைவர் பேராசிரியர் Dr பி.ராமசாமி கூறியுள்ளார்.
இந்நாட்டு இந்துக்களுக்கு ஒரு குடையாக மலேசிய இந்து சங்கம் அத்தகைய பணியை வழிநடத்த முடியுமென்றாலும், PHEB எனப்படும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தை நிர்வகித்த 13 வருட அனுபவத்தின் அடிப்படையில், அவர் வேறுபட்ட பார்வையை முன்வைத்துள்ளார்.
இந்து சொத்துக்களை நிர்வகிக்க அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சட்டரீதியான அமைப்பைக் கொண்ட ஒரே மாநிலம் பினாங்கு ஆகும்.
PHEB, பினாங்கு மாநில அரசின் அதிகார வரம்பில் செயல்பட்டாலும் கூட்டரசு தணிக்கைகளுக்கு உட்பட்டது; அதோடு ஆண்டு அறிக்கைகளை நாடாளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கிறது.
ஒரு சட்டரீதியான நிறுவனமாக, இந்து சமூகத்தின் நலனுக்காக கோயில்களையும் சொத்துக்களையும் கட்டாயமாகப் பெற்று, இந்து சமூகத்தை ஆதரிப்பதே PHEB-யின் முக்கிய நோக்கம்.
பினாங்கில் வெற்றிக் கண்ட இத்திட்டம் தேசிய அளவிலும் விரிவுப்படுத்தப்பட வேண்டும்.
தேசிய இந்து அறப்பணி வாரியம் அமைக்கப்பட்டு, வெவ்வேறு மாநிலங்களில் கிளைகளைக் கொண்டு, இந்து மத விவகாரங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் சட்டப்பூர்வ அதிகாரம் பெற்ற அமைப்பாக அது உருவாக வேண்டுமென ராமசாமி கூறினார்.