கோலாலம்பூர், டிசம்பர் 27 – மலேசியாவின் பிரபல நகைச்சுவை நடிகர் சத்தியா பெரியசாமிக்கு , மடானி கலைத்துறை உதவித் திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் மற்றும் தொடர்புத் துறை துணை அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.
“Pi Mai Pi Mai Tang Tu” தொலைக்காட்சி தொடரில் ‘ரவீ’ கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த சத்தியா, பல திரைப்படங்களிலும் நடித்த முன்னணி நட்சத்திரமாவர்.
அண்மையில், இருமுறை பக்கவாத தாக்கத்திற்கு ஆளாகியதால் தற்போது உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் நடிகர் சத்தியா.
இதனிடையே, இன்று துணை அமைச்சர் தியோ நீ சிங், சத்தியாவின் இல்லத்திற்கு நேரடியாக சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
மலேசிய திரைப்பட மேம்பாடு கழகமான FINAS செயல்படுத்தும் மடானி கலைத்துறை உதவித் திட்டத்தின் கீழ், உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட கலைஞர்களுக்கு உதவிகள் வழங்கப்படுவதும் அதன் முக்கிய பணிகளில் ஒன்றாகும் என்றார் துணை அமைச்சர் தியோ நீ சிங்.
இதுவரை கலைத்துறையைச் சேர்ந்த 48 கலைஞர்கள் இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு உதவிகளைப் பெற்றுள்ளனர் என்றார் அவர்.
இந்நிலையில், 60 வயது மதிக்கத்தக்க சத்தியா, தனக்குக் கிடைத்த உதவிக்கு நன்றி தெரிவித்தார்.
இன்றைய நிகழ்ச்சியில், FINAS தலைவர் டத்தோ கமில் ஒத்மான், தலைமை இயக்குநர் டத்தோ அஸ்மிரி சயீஃபுதீன் மற்றும் பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.