ஆயுதப் படைப் பயிற்சிகளுக்கு ஜோகூர் எப்போதும் தயார்: துங்கு இஸ்மாயில் வரவேற்பு

ஜோகூர் பாரு, மே-27,
மலேசிய ஆயுதப் படைகள் ஜோகூர் மாநிலத்தில் இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ள எப்போதும் வரவேற்கப்படுவதாக, ஜோகூர் இடைக்கால சுல்தான் துங்கு மக்கோத்தா, துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பையும் இறையாண்மையையும் நிலைநிறுத்த இத்தகைய பயிற்சிகள் மிகவும் அவசியம் என்றும், இதற்கு ஜோகூர் அரச குடும்பமும் மாநில அரசும் முழு ஆதரவை வழங்கும் என்றும் அவர் கூறினார்.
பயிற்சிகளை மேற்கொள்வதில் தேவையற்ற தடைகள் இருக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
முன்னதாக, பஹாங் தீவுகளுக்கு அருகில் திட்டமிடப்பட்டிருந்த இராணுவப் பயிற்சி, சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், மாநிலத்தில் எந்தவொரு பயிற்சிக்கும் முன் பஹாங் சுல்தானின் ஒப்புதலைப் பெற வேண்டும் என பஹாங் பட்டத்து இளவரசர் தெங்கு ஹசனால் நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், இராணுவப் பயிற்சிகள் கடுமையான வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டவை என்றும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் ஒப்புதலுக்கு பின்னரே அவை நடத்தப்படும் என்றும் தேசிய பாதுகாப்பு மன்றம் (MKN) தெரிவித்துள்ளது.



