தீவிர சுற்றுச்சூழல் பாதிப்பால் 2064-க்குள் உலக மக்கள் தொகை பாதியாக குறைய வாய்ப்பு: புதிய ஆய்வு எச்சரிக்கை

கோலாலம்பூர், மே-27,
தீவிர சுற்றுச்சூழல் பாதிப்புகள் அல்லது உலகளாவிய நெருக்கடிகள் ஏற்பட்டால், வரும் 2064-ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகை பாதியாகக் குறையக்கூடும் என புதிய கணித மாதிரி ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.
Chaos, Solitons & Fractals என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வை, லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகம் மற்றும் மிலன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 12,000 ஆண்டுகால மனித வளர்ச்சித் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, ஒரு புதிய நேரியல் அல்லாத கணித சமன்பாட்டை (Non-linear equation) அவர்கள் உருவாக்கியுள்ளனர்.
பருவநிலை மாற்றம், உலகளாவிய தொற்றுநோய்கள் அல்லது போர் போன்ற கடுமையான நெருக்கடிகளால் பூமியின் தாங்கும் திறன் திடீரென 200 கோடியாகக் குறைந்தால், அடுத்த 40 ஆண்டுகளில் மனித மக்கள் தொகை பாதியாகச் சரியும் என்பதை இந்த மாதிரி காட்டுகிறது.
எனினும், இது ஒரு சாத்தியமான மிக மோசமான சூழலை விளக்கும் ஆய்வுதானே தவிர, உறுதியான கணிப்பு அல்ல என்று ஆராய்ச்சியாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.



