Latestமலேசியா

நடுவர் நியமனம் முதல் புள்ளிகள் வரை சர்ச்சை; SUKMA சிலம்பப் போட்டியில் பல மாநில அணிகள் அதிருப்தி

கோலாலம்பூர், ஆகஸ்ட்.25- 2026 சிலாங்கூர் சுக்மா விளையாட்டுப் போட்டி நேற்று அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்த நிலையில், அதில் இடம்பெற்ற சிலம்பப் போட்டியில் எழுந்த சில சர்ச்சைகள் தற்போது பல தரப்பினரின் கவனத்தை ஈர்த்துள்ளன.

குறிப்பாக, போட்டியின் போது காணப்பட்ட சில குளறுபடிகள் பினாங்கு, நெகிரி செம்பிலான், பேராக் மற்றும் மலாக்கா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சிலம்ப அணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

தகுதியான நடுவர்கள் நியமிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு, புள்ளிகள் வழங்கப்பட்ட முறை, சில முடிவுகள் நியாயமானதாக இல்லை என்ற அதிருப்தி, மேலும் சில போட்டிகள் மீண்டும் நடத்தப்பட்டமை உள்ளிட்ட பல அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை என சம்பந்தப்பட்ட மாநில அணிகள் குறிப்பிட்டுள்ளன.

இந்த விவகாரங்கள் தொடர்பில் உரிய தரப்புகள் விரைவில் நடவடிக்கை எடுத்து, எழுந்துள்ள குறைபாடுகளை களைய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதேவேளையில், சிலம்பப் போட்டியின் போது ஏற்பட்ட அதிருப்தி ஒரு கட்டத்தில் மோதலாக மாறியதாகவும் கூறப்படுகிறது. இதன்போது சண்டை மூண்டதோடு, நாற்காலிகள் தூக்கி வீசப்பட்ட சம்பவமும் இடம்பெற்றது. இதனால் போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பல போட்டிகள் சுமூகமாக நடைபெற்ற நிலையில், அரும்பாடுபட்டு சுக்மா விளையாட்டுப் போட்டியில் இடம்பெறச் செய்யப்பட்ட சிலம்பத்தில் இத்தகைய விரும்பத்தகாத பிரச்சினைகள் நிகழ்ந்திருப்பது வருத்தமளிப்பதாக பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் குறிப்பிட்டார்.

இதனிடையே, இம்முறை நடைபெற்ற சிலம்பப் போட்டி ஒட்டுமொத்தத்தில் பல்வேறு விஷயங்களை கேள்விக்குறியாக்கியிருப்பதாக மலாக்கா மாநில சிலம்பக் கழகத் தலைவர் சுரேஷ் பாலகிருஷ்ணன் தமது மனக்குமுறலை வெளிப்படுத்தினார்.

2024 சரவாக் சுக்மாவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியிலும் சில குளறுபடிகள் காணப்பட்ட போதிலும், அவை மிதமான அளவிலேயே இருந்ததாக சுரேஷ் பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

ஆனால் இம்முறை சில சம்பவங்கள் கண்கூடாகவும் மிக வெளிப்படையாகவும் இடம்பெற்றதை காண முடிந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் சுக்மா, நாட்டின் மிகவும் பிரசித்தி பெற்ற விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றாகும்.

இந்தப் போட்டிக்காக நீண்ட காலம் முழுமையாகத் தயாராகி, கடும் போட்டித்தன்மையுடன் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு நியாயமான முடிவுகள் கிடைப்பது மிகவும் முக்கியமானது என சம்பந்தப்பட்ட தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், சிலம்பப் போட்டி தொடர்பில் எழுந்துள்ள இந்த அதிருப்திகள் மற்றும் கேள்விகளுக்கு விரைவில் தீர்வு காணப்படுமா என்பது தற்போது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு சம்பந்தப்பட்ட தரப்புகள்தான் உரிய விளக்கத்தையும் பதிலையும் வழங்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!