
செராஸ், ஆகஸ்ட் 25 -மலேசியத் தமிழ்த் திரையுலகில் மாறுபட்ட கதை சொல்லலும் தொழில்நுட்ப அணுகுமுறையும் கொண்ட புதிய படைப்பாக உருவாகியுள்ள ‘Poovellaam Kettuppaar – PKP’, ஆகஸ்ட் 27ஆம் தேதி நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இயக்குநர் Karthik Shaamalan இயக்கியுள்ள இந்த adventure மற்றும் psychological thriller திரைப்படத்தின் சிறப்புத் திரையிடல், செராஸ் GSC MyTOWN திரையரங்கில் நடைபெற்றது.
திரைப்படத் துறையினர், ஊடகவியலாளர்கள், அழைக்கப்பட்ட விருந்தினர்கள், நடிகர்-நடிகைகள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்ட இந்தத் திரையிடல், படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன்பாக அதன் கதைக்களம், தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் படக்குழுவின் முயற்சிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.
தனித்துவமான கதை சொல்லல் மற்றும் தொழில்நுட்ப முயற்சிகளால் கவனம் ஈர்த்து வரும் இயக்குநர் Karthik Shaamalan-ன் புதிய படைப்பு என்பதாலேயே ‘PKP’ மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இம்முறை இவர் adventure மற்றும் psychological thriller அம்சங்களை இணைத்து எப்படிப்பட்ட அனுபவத்தை வழங்கப் போகிறார் என்ற ஆர்வமும் உருவாகியுள்ளது.
145 நிமிடங்கள் ஓடும் PKP, முழுமையாக anamorphic format-இல் படமாக்கப்பட்ட மலேசியத் தமிழ் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. திரைப்படத்தின் visual presentation-க்கு தனித்துவமான அனுபவத்தை வழங்கும் நோக்கில் இந்த வடிவம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இந்தப் படம் தனது மனதிற்கு மிகவும் நெருக்கமான படைப்பு என இயக்குநர் Karthik Shaamalan கூறியுள்ளார். அன்பு, கடின உழைப்பு மற்றும் பல்வேறு உணர்வுகளின் பயணமாக PKP உருவாகியுள்ளதாகவும் இவர் பகிர்ந்துகொண்டார்.
படத்தில் Datin Shaila V, Magen Vikadakavi, Yuvaraj Krishnasamy, Veronica Thomas, Thashrra Aghonderan மற்றும் K.S. Maniam உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் Shameshan Mani Maran இசையமைத்துள்ள இந்தப் படத்தில், கதை மற்றும் காட்சிகளின் உணர்வுகளுக்கு இசை முக்கிய பங்காற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
சிறப்புத் திரையிடலில் கலந்து கொண்ட நடிகர்கள், PKP தங்களுக்கு வழக்கத்திலிருந்து மாறுபட்ட படப்பிடிப்பு அனுபவமாக இருந்ததாகக் கூறியதுடன், படத்தின் கதாபாத்திரங்களும் உருவாக்க முறையும் புதிய சவால்களை வழங்கியதாகப் பகிர்ந்துகொண்டனர்.
மலேசியத் தமிழ்த் திரைப்படத் துறையைச் சேர்ந்த பலரும் நிகழ்வில் கலந்து கொண்டு படக்குழுவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
திரையிடலுக்குப் பின்னர் படம் குறித்து பார்வையாளர்கள் மற்றும் சமூக ஊடகப் பிரபலங்களிடமிருந்தும் ஆரம்பக்கட்ட கருத்துகள் பெறப்பட்டன. குறிப்பாக, படத்தின் காட்சியமைப்பு, genre presentation மற்றும் தொழில்நுட்ப முயற்சிகள் குறித்து அவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
மலேசியத் தமிழ்ச் சினிமாவில் புதிய முயற்சிகளுக்கு இடமளிக்கும் ஒரு படைப்பாக உருவாகியுள்ள ‘Poovellaam Kettuppaar – PKP’, ஆகஸ்ட் 27 முதல் மலேசியத் திரையரங்குகளில் ரசிகர்களைச் சந்திக்கிறது.
மலேசியக் கலைஞர்களின் முயற்சிகளுக்கும் உள்ளூர் திரைப்படங்களுக்கும் தொடர்ந்து ஆதரவு வழங்க விரும்பும் ரசிகர்களுக்கு, இந்த வாரம் திரையரங்கில் பார்க்கக்கூடிய மற்றொரு மலேசியத் தமிழ் படைப்பாக PKP காத்திருக்கிறது.



