கிள்ளான், அக்டோபர்-14, புற்றுநோய் சங்கத்திற்கு நன்கொடைத் திரட்ட உதவும் நல்லெண்ணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘Bald & Beautiful 5.0’ நிகழ்வில், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் உள்ளிட்ட இரண்டாயிரம் பேர் தங்களின் தலையை மொட்டையடித்துக் கொண்டனர்.
Khind Starfish அறக்கட்டளை ஏற்பாடு செய்த அவ்வியக்கத்திற்கு தங்களின் ஆதரவைப் புலப்படுத்தும் வகையில் அவர்கள் அவ்வாறு செய்தனர்.
90 லட்சம் ரிங்கிட் நிதியை திரட்டும் இலக்கில், மலேசியப் புற்றுநோய் ஆராய்ச்சி மையம், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சரவாக் குழந்தைகள் சங்கம், கிள்ளான் ஹொக்கியன் சங்கம் ஆகியவற்றின் ஒத்துழைப்போடு, கிள்ளான் ஹொக்கியன் மண்டபத்தில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது.
அவ்வியக்கத்தின் தலையாய நோக்கமே, புற்றுநோய் ஆராய்ச்சிப் பணிகளை வலுப்படுத்தி, இவ்வட்டாரத்தில் புற்றுநோயாளிகள் வாழும் காலத்தை நீட்டிப்பதே என, கணபதிராவ் தமதுரையில் கூறினார்.
புற்றுநோயுடன் போராடி வருவோருக்கு நம்பிக்கையை ஊட்டும் வகையிலான இந்த ‘Bald & Beautiful 5.0’ முன்னெடுப்பில், பல்வேறு பின்புலங்களைக் கொண்ட மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்றது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் சொன்னார்.
மடானி அரசாங்கத்தின் கீழ் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் திட்டங்களுக்கு மட்டுமின்றி, இதுபோன்ற சமூக நல்லெண்ணத் திட்டத்திற்கும் மக்கள் வற்றாத ஆதரவை வழங்குவதும் முக்கியம் என கணபதிராவ் கேட்டுக் கொண்டார்.