Latestமலேசியா

நான்காம் ஆண்டு Matrix மதிப்பீட்டின் DLP வினாத்தாள்களில் தமிழ்மொழி இடம்பெறாதது ஏன்? விளக்கம் கோரும் தினகரன்

பினாங்கு, அக்.07-நான்காம் ஆண்டு Matrix தேர்வு மதிப்பீட்டுக்கான இருமொழித் திட்டம் (DLP) வினாத்தாள்களில் தமிழ் மொழி இடம்பெறாதது குறித்து கல்வி அமைச்சு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என பினாங்கு மாநில ம.இ.கா தலைவர் டத்தோ ஜே. தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

தேர்வை எதிர்கொண்ட பல தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள், DLP வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் மலாய் மொழிகளில் மட்டுமே வழங்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மலாய்மொழியும் ஆங்கிலமும் முக்கியம் என்பதை ஏற்றுக் கொண்டாலும், தமிழ்ப்பள்ளி மாணவர்களின் தாய்மொழியான தமிழ் புறக்கணிக்கப்படக்கூடாது என அவர் சுட்டிக் காட்டினார்.

 

பள்ளிகள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு முன்னறிவிப்பு வழங்காமல் அவ்வாறு செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பிய தினகரன், இதனால் மாணவர்களுக்கு குழப்பமும் மன அழுத்தமும் ஏற்படக்கூடும் எனக் கூறினார். மேலும், கேள்விகளைப் புரிந்து கொண்டு பதிலளிக்கும் மாணவர்களின் திறனும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 

வினாத்தாள்களில் தமிழ் மொழி இடம்பெறாததற்கான காரணம் என்ன, அம்முடிவை யார் எடுத்தது? கல்வி அமைச்சா அல்லது வினாத்தாள் தயாரிப்புத் தரப்பினரா என்பதை அமைச்சு தெளிவுபடுத்த வேண்டும். அதோடு கல்வி மற்றும் மதிப்பீட்டு முறைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்போது, அவை வெளிப்படையான முறையில் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட வேண்டும் என தினகரன் தெரிவித்தார்.

 

மலாய்மொழி மதிக்கப்பட வேண்டும், ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறுவதும் முக்கியம் என்றாலும், தமிழ்ப்பள்ளி மாணவர்களின் தாய்மொழியான தமிழ் தொடர்ந்து மதிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என் தினகரன் மீண்டும் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!