
கலிஃபோர்னியா, மே-23 – உலகில் மனிதர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட, சில பெரும் பணக்காரர்கள் தங்களது செல்லப் பிராணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
அதன் உச்சகட்டமாக, அமெரிக்காவில் உள்ள கோடீஸ்வர குடும்பங்கள் தங்களது நாய்களைப் பராமரிக்கும் Dog Nanny என்ற வேலைக்கு, ஆண்டுக்கு 288,000 டாலர் வரை சம்பளம் தரத் தயாராக உள்ளன.
அண்மையில் ஒரு முன்னணி வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்ட இந்த விளம்பரம் இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
இந்த வேலைக்குத் தேர்வாகும் நபர், சாதாரண நாய் பராமரிப்பாளராக இருக்க முடியாது.
அதாவது இவர்கள் நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்வது மற்றும் உணவு வழங்குவதோடு மட்டுமல்லாமல், ஒரு நாளில் 8 முதல் 10 மணி நேரம் வரை அந்தப் செல்லப்பிராணிகளுடனேயே தங்கியிருக்க வேண்டும்; சில நேரங்களில் இவர்கள் முழுநேரப் பணிக்காகவும் அமர்த்தப்படுகிறார்கள்.
தவிர, நாய்களுக்கான பிரத்யேக உணவு முறைகளைக் கவனிப்பது, மருத்துவப் பரிசோதனைகளைச் சரியாகச் செய்வது மற்றும் உரிமையாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அவர்களது தனிப்பட்ட ஜெட் விமானங்களிலேயே நாய்களுடன் செல்ல வேண்டியது போன்றவை இவர்களின் முக்கியப் பொறுப்புகளாகும்.
தற்போது இந்த வேலைக்கு உலகெங்கிலும் இருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதால், அந்த நிறுவனம் தற்காலிகமாக விளம்பரத்தையே நிறுத்தி வைத்துள்ளதாம்.
Manhattan, The Hamptons மற்றும் கலிபோர்னியாவின் சில பகுதிகள் போன்ற பணக்காரர்கள் வாழும் பகுதிகளில் இந்தத் தொழில் தற்போது மிக வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது.



