
கோலாலம்பூர், ஜூலை-7-2001 ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டத்தின் கீழ் நாற்பது பேர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் 25 ஆண்டுகள் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில், நான்கு பேர் ஓராண்டுக்கும் குறைவாகவும், 14 பேர் ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலும், ஏழு பேர் ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரையிலும், எட்டு பேர் 10 முதல் 15 ஆண்டுகள் வரையிலும், நான்கு பேர் 15 முதல் 20 ஆண்டுகள் வரையிலும், மற்றும் மூன்று பேர் 20 முதல் 25 ஆண்டுகள் வரையிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என பிரதமர் துறையின் சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தத்திற்கான பிரதமர் துறை துணை அமைச்சர் எம். குலசேகரன் கூறினார்.
சிறார்களின் நலன் மற்றும் அனைத்துலகத் தரங்களுக்கு ஏற்ப சட்டத்தைச் சீரமைப்பதற்காக, அதில் திருத்தங்கள் செய்வது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. இச்சட்டத்தின் கீழ் சிறார்கள் தடுத்து வைக்கப்படுவதை குறிப்பாக நடப்பிலுள்ள சட்டப் பிரிவில் ஒரு குறிப்பிட்ட தடுப்புக் காலம் இல்லாததை அரசாங்கம் தீவிரமாக எடுத்துக் கொள்கிறது.
2023 கட்டாய மரண தண்டனை ஒழிப்புச் சட்டம் மூலம் கட்டாய மரண தண்டனைகளும் ஆயுள் தண்டனைகளும் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, இந்தச் சட்டப் பிரிவும் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என துணையமைச்சர் வலியுறுத்தினார்.
2001 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தை மறுஆய்வு செய்து திருத்துவதற்காக, அமைச்சுகள், அரசாங்க நிறுவனங்கள், சட்ட வல்லுநர் அமைப்புகள் மற்றும் மலேசிய மனித உரிமைகள் ஆணையம், யுனிசெஃப் உள்ளிட்ட பிரதிநிதிகளைக் கொண்ட சிறப்புக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
தெளிவான தடுப்புக் காவல் காலங்களை நிர்ணயித்தல், வருடாந்திர மறுஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், குழந்தைகளுக்கு சமூகத்தில் மறுவாழ்வு அளித்து மீண்டும் ஒருங்கிணைப்பதற்கான அணுகுமுறைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட திருத்தங்கள் மீதான கொள்கை முன்மொழிவுகளை அரசாங்கம் மறுஆய்வு செய்து விவாதிக்கும் கட்டத்தில் உள்ளது.
அதோடு பிரிட்டன், ஆஸ்திரேலியா, கத்தார் மற்றும் இந்தியா உள்ளிட்ட சுமார் 25 நாடுகளை உட்படுத்திய ஒப்பீட்டு சட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் குலசேகரன் கூறினார்.



