
கோலாலாம்பூர், ஜூன்-10-முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்கின் மனைவி டத்தின் ஸ்ரீ ரொஸ்மா மன்சூர், லெபனான் நாட்டு நகை நிறுவனத்திற்கு 14.6 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்க வேண்டுமென, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், Global Royalty Trading SAL நிறுவனத்தால் ரொஸ்மாவின் பார்வைக்காக வைர நெக்லஸ்கள், வளையல்கள் மற்றும் கிரீடங்கள் உள்ளிட்ட 43 விலையுயர்ந்த நகைகள் அனுப்பப்பட்டிருந்தன.
ஆனால் ஒப்பந்தப்படி, அந்த நகைகளைத் திரும்ப ஒப்படைக்கத் தவறியதால், அவற்றின் மதிப்பீட்டுத் தொகையை ரொஸ்மா செலுத்த வேண்டும் என நீதிபதி Quay Chew Soon தீர்ப்பளித்துள்ளார்.
இந்த வழக்கில் தற்காப்பு வாதம் செய்திருந்த ரொஸ்மா, 2018 மே மாதம் 1MDB ஊழல் விசாரணைக்காகத் தனது இல்லத்தில் போலீஸார் நடத்திய சோதனையின்போது இந்த நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டதாகக் கூறி, போலீஸ் மீது இழப்பீட்டு வழக்கைத் தொடர்ந்திருந்தார்.
இருப்பினும், போலீஸார் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களின்படி, பறிமுதல் செய்யப்பட்ட நகைகளில் இந்த 43 நகைகள் இடம்பெறவில்லை என்பது உறுதியானது.
இதையடுத்து, போலீசார் மீதான ரொஸ்மாவின் மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம், லெபனான் நிறுவனத்திற்கு வட்டியுடன் சேர்த்து முழு இழப்பீட்டையும் அந்த முன்னாள் முதல் பெண்மணியே வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.



