Latestமலேசியா

நீலாய் பழைய பள்ளிவாசலில் மௌலிதுர் ரசூல் விழா கோலாகலம்; 15 சிறந்த மாணவர்கள் கௌரவிப்பு

நீலாய், செப்-14 – நெகிரி செம்பிலான், நீலாய் பழைய பள்ளிவாசலில் மௌலிதுர் ரசூல் 2026 எனும் நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா நேற்று சமய, சமூக மற்றும் கல்வி அம்சங்களை ஒருங்கிணைத்து வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மௌலித் பாராயணத்துடன் தொடங்கிய விழாவில், அஸர் தொழுகையைத் தொடர்ந்து மாலை சிற்றுண்டி உபசரிப்பு இடம்பெற்றது. பின்னர் தமிழ் மொழியில் சிறப்புச் சொற்பொழிவும், மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு மலாய் மொழியில் சமயச் சொற்பொழிவும் நடைபெற்றன.

தமிழ் மொழியிலான சிறப்புச் சொற்பொழிவை போர்ட்டிக்சன் சுராவ் அல்-நூரியாவின் இமாம் மௌலானா மௌலவி ஹபிஸ் முகமது ஷமீம் ரஷாதி வழங்கினார்.

விழாவின் நோக்கம் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் குறித்து நீலாய் பழைய பள்ளிவாசலின் தகவல், ஊடகம் மற்றும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் முகமது காசிம் முகமது கனி, வணக்கம் மலேசியாவிடம் விளக்கினார்.

விழாவின் மற்றொரு முக்கிய அம்சமாக, சமூகத்திற்குப் பங்களித்தவர்களின் சேவைகளைப் போற்றும் வகையில் சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன.

‘தோகோ மௌலிதுர் ரசூல் 2026’ விருது மறைந்த ஹாஜி எஸ்.எஸ். நாகூர் கனி பின் ஹாஜி சைதுவுக்கு வழங்கப்பட்டது. அதேவேளை, மறைந்த அப்துல் சலாம் பின் கபீரின் சமூகப் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் சிறப்பு நினைவு விருதும் வழங்கப்பட்டது.

கல்விச் சாதனைகளுக்கும் விழாவில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. UPKK, PSRA, SPM, STPM, டிப்ளோமா மற்றும் பட்டப்படிப்பு நிலைகளில் சிறந்து விளங்கிய 15 மாணவர்கள் சிறந்த மாணவர் விருதுகள் மற்றும் நற்சான்றிதழ்களுடன் கௌரவிக்கப்பட்டனர்.

அவர்களில் சிலர் தங்களது சாதனை குறித்த மகிழ்ச்சியை வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்து கொண்டனர்.

சமய வழிபாட்டுடன் சமூகப் பங்களிப்பை அங்கீகரித்து, இளம் தலைமுறையின் கல்விச் சாதனைகளையும் ஊக்குவிக்கும் நிகழ்வாக இவ்வாண்டின் மௌலிதுர் ரசூல் விழா அமைந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!