கோலாலம்பூர், நவம்பர்-27, UPNM எனப்படும் மலேசியத் தேசியத் தற்காப்புப் பல்கலைக்கழகத்தில் 3 பகடிவதை சம்பவங்களில் சம்பந்தப்பட்ட 5 மாணவர்களும் பல்கலைக்கழகத்திலிருந்தே நீக்கப்பட்டுள்ளனர்.
இராணுவப் பயிற்சி மையத்தின் பரிந்துரையின் பேரில் மலேசிய ஆயுதப்படை மன்றம் அந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
பட்டப்படிப்புக்கு ஆன மொத்த செலவினங்கள் அடிப்படையில், அரசாங்கத்துக்கு அவர்கள் இழப்பீடு வழங்க வேண்டுமென்றும், உயர் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ காலிட் நோர்டின் தெரிவித்தார்.
அவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள இந்நடவடிக்கை, ஆயுதப் படையைச் சார்ந்ததாகும்;
UPNM நிர்வாகமோ அல்லது சட்டத் துறைத் தலைவரோ எடுக்கப் போகும் நடவடிக்கைகளை இது கட்டுப்படுத்தாது என அமைச்சர் விளக்கினார்.
UPNM பல்கலைக்கழகத்தின் இராணுவ பயிற்சி வீரர்களை உட்படுத்திய பகடிவதை சம்பவங்கள், அண்மையில் அடுத்தடுத்து அம்பலமாகின.
மூத்த மாணவர்களால் ஒருவர் இஸ்திரிப் பெட்டியால் சூடு வைக்கப்பட்டதும், மற்றொருவர் நெஞ்சில் மிதிக்கப்பட்டு விலா மற்றும் முதுகெலும்பு முறிவுக்கு ஆளானதும் அதில் குறிப்பிடத்தக்கது.