Latestமலேசியா

பண்டார் செகாமாட் தமிழ்ப்பள்ளி மைதான விவகாரம்: 43 ஆண்டுகாலப் பிரச்னை அல்ல; பெற்றோர் ஆசிரியர் சங்கம் விளக்கம்

செகாமாட், ஜூன்-18-ஜோகூர், பண்டார் செகாமாட் தமிழ்ப்பள்ளியின் விளையாட்டு மைதான எல்லைப் பிரச்சனை குறித்துப் பொது மக்களிடையே நிலவி வந்த சில தவறான புரிதல்களுக்கு அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் தற்போது மிக முக்கியமான விளக்கமொன்றை அளித்துள்ளது.

ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் இப்பள்ளியின் விவகாரம் கடந்த 43 ஆண்டுகாலப் பழமையான ஒரு நீண்டகாலப் பிரச்னை எனப் பரவலாகப் பேசப்பட்டு வந்தது.

ஆனால், இந்தத் தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் வீரன் வேலாயுதம் வணக்கம் மலேசியாவிடம் விளக்கியுள்ளார்.

தற்பொழுது நிலவி வரும் சூழலானது கடந்த 43 ஆண்டுகளாக நீடிக்கவில்லை; மாறாக, இது கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் மட்டுமே இருந்து வரும் ஒரு விவகாரம் என்றார் அவர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தெரிய வந்த பிறகு தான் ஆவணங்களைத் திரட்டியது உட்பட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, கடைசியாக கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் பள்ளிக்கே நேரில் வந்து நில அனுமதி கடிதத்தை கொடுத்து தீர்வு வழங்கியதாக வீரன் சொன்னார்.

இதையடுத்து முதல் கட்டமாக விளையாட்டு மைதானத்தை சுற்றளவு செய்து, வேலி போடும் நடவடிக்கைகள் இனி வேகமெடுக்கும் என்றார் அவர்.

கடந்தாண்டு நூற்றாண்டு விழாவை கொண்டாடிய இந்த பண்டார் செகாமாட் தமிழ்ப் பள்ளியின் விளையாட்டு மைதான பிரச்னைக்கு, ஏழாண்டு கால போராட்டத்தின் வாயிலாக ஒருவழியாக விடிவுகாலம் பிறந்திருப்பது குறித்து வீரர் மனநிம்மதி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!