
பேங்கோக், மார்ச்-28-தாய்லாந்தில் எரிபொருள் பற்றாக்குறை அச்சம் காரணமாக மக்கள் பதற்றத்தில் பெட்ரோலை வாங்கிக் குவிக்கத் தொடங்கியுள்ளனர்.
மேற்காசிய மோதலால் உலகளாவிய விநியோகம் சிக்கலடைந்து, எரிபொருள் விலை திடீரென உயர்ந்ததே இதற்குக் காரணமாகும்.
இதனைத் தொடர்ந்து, தாய்லாந்து அரசாங்கம் அவசர மின்சார மற்றும் எரிபொருள் சேமிப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
குறிப்பாக அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்; தேவையற்ற வெளிநாட்டு பயணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன…
அலுவலகங்களில் குளிரூட்டிகளின் வெப்பநிலை உயர்த்தப்படுவது உள்ளிட்ட மின்சார பயன்பாட்டை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
சாதாரண உடைகளில் வேலைக்கு வருமாறு அதிகாரிகள் உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், மின்னியல் படிகட்டுகளுக்கு பதிலாகப் படிகளில் ஏறுமாறும் ஆலோசனைக் கூறப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் எரிபொருள் கையிருப்பு இன்னும் போதுமான அளவில் இருந்தாலும், நிலைமை மோசமடையாமல் தடுக்க இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
நிலைமையைப் பொருத்து மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, பொது மக்கள் பதற்றப்படாமல் அமைதியாக இருக்குமாறும், தேவையற்ற அளவில் எரிபொருளை வாங்கி குவிக்க வேண்டாமெனவும் அந்நாட்டு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
முன்னதாகத், தாய்லாந்து பெட்ரோல் நிலையங்களில் மக்கள் புட்டிகளில் பெட்ரோல் வாங்க படையெடுத்த வீடியோக்கள் வைரலாகின.



