
சிரம்பான், செப்டம்பர்-21,நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள் அனைவரின் நியமனத்தையும் உடனடியாக இரத்துச் செய்து அதிரடி காட்டியுள்ளார் சமஸ்தானாதிபதி துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர்.
ஆட்சிக் குழு உறுப்பினர்கள் தங்களது பதவிப் பிரமாணத்தையும் விசுவாச உறுதிமொழியையும் மீறிய காரணத்தால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரண்மனை அதிகாரி டத்தோ அஸிஸி முஹமட் அலி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.
1959-ஆம் ஆண்டு நெகிரி செம்பிலான் மாநில அரசியலமைப்புச் சாசனத்தின் கீழ் சமஸ்தானாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த இரத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு உட்பட்டு, புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பட்டியலை அளிக்குமாறு மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம் பணிக்கப்பட்டுள்ளார்.
நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் பாரிசான் நேஷனல் தலைமையில் ஆட்சி அமைந்ததும் 10 பேரடங்கிய இந்த ஆட்சிக் குழு உறுப்பினர்கள் துவாங்கு முஹ்ரிஸ் முன்னிலையில் பதவியேற்றனர்.
எனினும், துவாங்கு முஹ்ரிஸை அரியணையிலிருந்து அகற்றும் தீர்மானத்தை ஆதரிக்க, செப்டம்பர் 15-ஆம் தேதி கூடிய ஆட்சிக் குழு முடிவெடுத்ததால் நிலைமை மேலும் சிக்கலாகியது.
இதையடுத்து, வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்பிய துவாங்கு முஹ்ரிஸ் இந்த அதிரடி நடவடிக்கையை அறிவித்துள்ளார்.



