
பத்து பஹாட், செப்டம்பர்-6 – ஜோகூர், பத்து பாஹாட்டில் பாட்டியின் வீட்டுக்கு வெளியே, 2 வயது பெண் குழந்தை வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் 5 தெரு நாய்களால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்தார்.
இச்சம்பவம் நேற்று காலை 7 மணியளவில் Peserai, Sungai Kelambu, Kampung Tambak கிராமத்தில் நிகழ்ந்தது.
ஜோகூர் பாருவுக்கு ஒரு வேலையாகச் செல்ல வேண்டியிருந்ததால், Nur Haira Watikah Mohammad Hamizi என்ற அச்சிறுமியை அவளது பெற்றோர் பாட்டி வீட்டில் விட்டுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தின் போது நாய்கள் கடித்துக் குதறியதில் தனது பேத்தி தலை மற்றும் முகத்தில் பலத்த கடி காயங்களுடன், இரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்ததை கண்டு செய்வதறியாது உதவிக் கோரி கூச்சலிட்டதாக 57 வயது பாட்டி Darlinda Darlis கூறினார்.
சத்தம் கேட்டு வெளியே வந்த அம்மாதுவின் மகன் Nur Haira-வைக் காப்பாற்றி உடனடியாக சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றார்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பின், மேல் சிகிச்சைக்காக ஜோகூர் பாரு சுல்தானா அமீனா மருத்துவமனைக்கு சிறுமி மாற்றப்பட்டார்.
அப்பகுதியில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் பன்றி வேட்டையாடுபவர்களால் இந்த நாய்கள் விட்டுச் செல்லப்பட்டதாக சிறுமியின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் 2001 குழந்தைகள் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பத்து பஹாட் மாவட்டப் போலீஸ் கூறியது.



