Latestஉலகம்மலேசியா

2014-ல் மலேசிய அரசைக் கவிழ்க்க அமெரிக்கா உதவியதா? பாஸ் குற்றச்சாட்டை மறுத்த அமெரிக்கத் தூதரகம்; ஆதாரத்தை வெளியிட ஹாடிக்கு சிவமலர் சவால்

கோலாலம்பூர், செப்டம்பர்-6,2014-ஆம் ஆண்டு அப்போதைய மலேசிய அரசாங்கத்தைக் கவிழ்க்க அமெரிக்கா உதவிக்கரம் நீட்டியதாக பாஸ் கட்சித் தலைவர் தான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் கூறிய குற்றச்சாட்டை, கோலாலம்பூரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

அமெரிக்கா ஒருபோதும் மலேசியாவின் அரசியல் தலைமைத்துவத்தை தீர்மானிக்கவோ அல்லது அதில் ஆதிக்கம் செலுத்தவோ முயன்றதில்லை; எனவே அதற்கு மாறாக வரும் தகவல்கள் முற்றிலும் பொய் என்றும் அமெரிக்கத் தூதரகத்தின் பொறுப்பதிகாரி David H. Gamble Jr. தெளிவுபடுத்தினார்.

கிளந்தான், கோத்தா பாருவில் நடைபெற்ற பாஸ் கட்சியின் 72-ஆவது பொதுப் பேரவையில் பேசிய ஹாடி அவாங், 2014-ஆம் ஆண்டு பாரிசான் நேஷனல் தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்க்க அமெரிக்கத் தூதரகப் பிரதிநிதி ஒருவர் தங்களுக்கு உதவ முன்வந்ததாகக் குற்றம் சாட்டினார்.

மேலும், அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மலேசிய வருகையின் போது, பிரதமர் பதவிக்கு பாஸ் கட்சியின் தேர்வு யார் என்பதனை அந்தப் பிரதிநிதி கேட்டறிந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இப்பேச்சு அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அமெரிக்கத் தூதரகம் இதற்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது.

இவ்வேளையில், ஹாடி அவாங் தனது குற்றச்சாட்டை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என் பி.கே.ஆர் துணைப் பொதுச்செயலாளர் சிவமலர் கணபதி வலியுறுத்தியுள்ளார்.

வெளிநாட்டுத் தலையீடு, தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் இறையாண்மை தொடர்பான குற்றச்சாட்டுகளைத் தகுந்த ஆதாரங்கள் இன்றி யாரும் இஷ்டத்திற்கு முன்வைக்க முடியாது என்றார் அவர்.

இதில் சம்பந்தப்பட்ட அமெரிக்க அதிகாரிகள் யார், என்ன ஆதாரங்கள் உள்ளன போன்றவற்றை ஹாடி வெளியிட வேண்டும்; அதே சமயம் ஒருவேளை அரசாங்கத்தைச் சீர்குலைக்கும் வெளிநாட்டுச் சதி உண்மையாக இருந்தால், அது பற்றி தெரிந்திருந்தும் பாஸ் கட்சி ஏன் 12 ஆண்டுகளாக அமைதி காத்தது என சிவமலர் கேள்வி எழுப்பினார்.

தவிர, 2014-ஆம் ஆண்டு சந்திப்பு தொடர்பாக ஹாடி அவாங் கூறிய கூற்றுக்கும், பாஸ் பொதுச்செயலாளர் டத்தோ ஸ்ரீ தாக்கியுடின் ஹசான் கூறிய கருத்துக்களுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளையும் சிவமலர் சுட்டிக்காட்டினார்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள அவர், இத்தகையப் புகார்கள் மலேசியாவின் அரச தந்திர உறவுகளைப் பாதிக்கும் அபாயம் உள்ளது என சுட்டிக் காட்டினார்.

ஆக, ஹாடி அவாங் இதற்கான ஆதாரங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் அல்லது தனது கூற்றை வாபஸ் பெற்று மன்னிப்புக் கேட்க வேண்டும் என அறிக்கை வாயிலாக சிவமலர் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!